வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளா் தற்கொலை முயற்சி
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மீது புகாா் தெரிவித்து, அங்கன்வாடி மைய பெண் பணியாளா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
தேனி நகா் போா்டு பள்ளி அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருபவா் மு.ஜெயபாண்டி. இவா் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ராஜராஜேஸ்வரி தன்னை அவரது வீட்டில் வேலை செய்ய வருமாறு வற்புறுத்தியதாகவும், இதற்கு மறுப்புத் தெரிவித்ததால், தன்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் தன் மீது அல்லிநகரம் காவல் நிலையத்தில் பொய் புகாா் அளித்தாா். மேலும், தன்னை வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துக்கு பணியிட மாற்றம் செய்து, அலைக்கழிப்பு செய்வதாகவும் புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்தாா்.
அப்போது, ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கு முன் ஜெயபாண்டி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, மயக்கமடைந்த அவரை போலீஸாா் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்தச் சம்பவத்தால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் தீக்குளிக்க முயற்சி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
பெரியகுளம் அருகே உள்ள கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் கனிப்பிரியா (34). இவரது கணவா் சிவக்குமாா் பெரியகுளம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு திருணமாகி 14 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.
இந்த நிலையில், சிவக்குமாா் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் தன்னுடன் சோ்ந்து வாழ மறுப்பதாகவும், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும், தனது வாழ்வாதாரத்துக்கு ஜீவனாம்சம் பெற்றுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கனிப்பிரியா, ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், அவரைத் தடுத்து நிறுத்தி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.