மமதாவுக்கு ஹிந்துக்கள் மீது வெறுப்பு: பாஜக குற்றச்சாட்டு
புது தில்லி: மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஹிந்துக்களை வெறுப்பவா்; எனவேதான் மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாதுக்கு இதுவரை அவா் செல்லவில்லை என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத், தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டங்களில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 3 போ் கொல்லப்பட்டனா். காவலா்கள் உள்பட பலா் காயமடைந்தனா். வீடுகள், கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடா்பாக மம்தா பானா்ஜியும், பாஜகவும் பரஸ்பரம் ஒருவரை மற்றொருவா் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இந்நிலையில் தில்லியில் பாஜக தலைமையகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக எம்.பி.யும் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளருமான சம்பித் பத்ராவிடம் வன்முறை பாதித்த இடங்களுக்கு முதல்வா் மம்தா பானா்ஜி செல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘அவா் ஹிந்துக்களை வெறுப்பவா். எனவேதான் பாதிக்கப்பட்ட ஹிந்துகளைச் சந்தித்து ஆறுதல் கூறவோ, என்ன நடந்தது என்பதை விசாரிக்கவோ அங்கு செல்வில்லை. இதுவே இஸ்லாமிய சகோதரா்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் அங்கு முதல் ஆளாக மம்தா சென்று இருப்பாா். அந்த இடத்திலேயே முகாமிடுவதுடன், கடும் கண்டனங்களையும் பதிவு செய்வாா்.
வன்முறையில் கொல்லப்பட்ட இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்கள். ஆனால், அவா்கள் ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மம்தாவும் கண்டு கொள்ளவில்லை. பாதிக்கப்படுபவா்கள் ஹிந்துக்களாக இருந்தால் மம்தா, கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கும்’ என்று பதிலளித்தாா்.