Pope தேர்தல் எப்படி நடைபெறும்; தேர்வுசெய்யும் குழுவில் முதல் `தலித்' கார்டினல் ய...
Health: வெள்ளரி, கொய்யாவில் உப்பு, மிளகாய்த்தூள் தூவி சாப்பிடலாமா?
அப்பா என்ன வெயில்! இதை சமாளிக்க, உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள ஜில்லுனு இருக்கிற பொருள்களாக தேடித் தேடி சாப்பிடுகிறோம். அதிலும், தர்பூசணி, வெள்ளரிக்காய், கொய்யாப்பழம் போன்ற இயற்கையான பொருள்களை சாப்பிடுவது பெரும்பாலோருக்கு அலாதிப்பிரியம். ஆனால், வெள்ளரிக்காய், கொய்யாப்பழத்தில் சுவைக்காக பலரும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடலாமா என சித்த மருத்துவர் டாக்டர். விக்ரம் அவர்களிடம் கேட்டோம்.

''அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் பழங்கள் இயற்கை நமக்கு கொடுத்த கொடை. அப்படி கொடையாக கிடைக்கிற பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. சில பேர் உடலுக்குக் குளிர்ச்சித் தரும் பழங்களை சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என நினைத்துக்கொண்டு உப்பு, மிளகாய்த்தூள் தூவி சாப்பிடுகிறார்கள். கூடுதல் சுவைக்காக சிறிதளவு மிளகாய்த்தூளுடன் உப்பு சேர்த்து சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், அடிக்கடியோ அல்லது தினமுமோ இப்படி சாப்பிட்டால் அல்சர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், இது உடலில் கபத்தையும் அதிகரித்து விடும்.
மிளகாய்த்தூளுக்கு பதிலாக மிளகுத்தூளை சேர்த்த சாப்பிடுவது நன்மை பயக்கும். பண்டைய காலங்களில் மிளகுத்தூள் தான் தர்பூசணி சாப்பிடும்போது பயன்படுத்துவார்கள். தற்போது மிளகின் விலை உயர்வு காரணமாக பழங்களுக்கு மேலே மிளகாய்த்தூளை பயன்படுத்துகிறார்கள். உப்புடன் மிளகுத்தூளை சேர்த்து சாப்பிடும்போது கபத்தை குறைத்து ஜலதோஷம் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

பருவ நிலைகளுக்கு ஏற்ப தடவ வெப்பநிலையும் மாறிக்கொண்டுதான் இருக்கும். நம் உடலும் அதற்கு ஏற்ப அதனை தகவமைத்துக் கொள்ளும். இருப்பினும், இந்த கோடை காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது முக்கியம்'' என்கிறார் டாக்டர். விக்ரம் குமார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
