ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் நிதான ஆட்டம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 25 ரன்கள் பின் தங்கியுள்ளது.
ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட்டில் நேற்று (ஏப்ரல் 20) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
இதையும் படிக்க: பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+; ஸ்ரேயாஸ், இஷான் சேர்ப்பு! முழு விவரம்..
191 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மோமினுல் ஹாக் அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 40 ரன்களும், ஜேக்கர் அலி 28 ரன்களும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் முஸராபானி மற்றும் வெலிங்டன் மசகட்ஸா தலா 3 விக்கெட்டுகளையும், மத்வீர் மற்றும் நியாச்சி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 59 ரன்களும், பிரையன் பென்னட் 57 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, நியாஷா மயாவோ 35 ரன்களும், நிகராவா 28 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹாசன் மிராஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நஹித் ராணா 3 விக்கெட்டுகளையும், ஹாசன் மஹ்முத் மற்றும் காலேத் அகமது தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: அடுத்த சீசனுக்கான வலுவான பிளேயிங் லெவனை உருவாக்க வேண்டும்: எம்.எஸ்.தோனி
25 ரன்கள் பின் தங்கிய வங்கதேசம்
ஜிம்பாப்வே அணி 273 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்க, 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது வங்கதேசம். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. ஷாத்மன் இஸ்லாம் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மஹ்மதுல் ஹாசன் ஜாய் 28 ரன்களுடனும், மோமினுல் ஹாக் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேசம் ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 25 ரன்கள் பின் தங்கியுள்ளது.