Pope: 'அடுத்த போப் யார்? - தேர்வு முறை எப்படி நடக்கும் தெரியுமா? - சுவாரஸ்ய தகவல்கள்!
கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப்பாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு அடுத்த போப் யார்? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அடுத்த போப் (Pope) யார் என்பதை முன்கூட்டியே கணிப்பது சாத்தியமில்லை. கத்தோலிக்க திருச்சபையில் போப் தேர்வு மிகவும் ரகசியமான, ஆன்மிக அடிப்படையிலான செயல்முறை என்பதால் யாராலும் எளிதாக கணிக்க முடியாது.

மிக முக்கிய நிகழ்வு:
ஐரோப்பிய மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்படும் மிக முக்கிய நிகழ்வு போப் தேர்வு. இது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கத்தோலிக்க மக்களால் தீவிரமாக கவனிக்கப்படும் நிகழ்வாகவும் கூறலாம்.
போப் தேர்வு எப்படி நடக்கும்?
பதவியில் இருக்கும் போப் இறந்துவிட்டாலோ, பதவியை ராஜினாமா செய்துவிட்டாலோ அடுத்த போப்புக்கான தேர்வு நடைபெறும். போப்பை தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றுபவர்கள் கார்டினல்கள் (Cardinals).

யார் இந்த கார்டினல்கள்?
கத்தோலிக்க திருச்சபையின் மிகவும் உயர்ந்த பதவிகளில் ஒன்று கார்டினல். இவர்கள் போப்புக்கு நேரடி உதவியாளர்களாகவும், திருச்சபையின் நிர்வாக, ஆன்மிக, தேர்தல் பணிகளில் முக்கியப் பொறுப்பாளர்களாகவும் செயல்படுகிறார்கள். திருச்சபையின் முக்கிய தீர்மானங்களில் போப்புக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். வாடிகன் தூதர்களாக, பேரரசர்களாக உலகம் முழுவதும் உள்ள நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் பதவிகளில் இருக்கிறார்கள். திருச்சபையின் பல பிரிவுகள் மற்றும் அலுவலகங்களையும் நிர்வகிக்கின்றனர்.
தேர்தல்:
80 வயதுக்குள் இருக்கும் கார்டினல்கள் மட்டுமே வாக்களிக்க தகுதியுடையவர்கள். அவர்கள் அனைவரும் ரோமிலுள்ள சிஸ்டின் கேப்பலில் (Sistine Chapel) ஒன்றுசேர்க்கப்படுகிறார்கள். அதற்குப் பிறகு “Extra omnes!” - 'எல்லோரும் வெளியே' எனக் கூறப்படும். அப்போதே அந்தப் பகுதிக்குள் இருக்கும் மற்றவர்கள் அனைவரும் வெளியேறிவிடுவார்கள். பின்னர் கதவுகள் பூட்டப்படுகின்றன. உயர்ந்த அந்தஸ்துடைய கார்டினல்களின் பெயரை ஒவ்வொரு கார்டினாலும் சீட்டில் எழுதி கொடுப்பார்.

அதன் அடிப்படையில் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வின் முடிவில் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், எழுதிக்கொடுக்கப்பட்ட சீட்டுகளிலிருந்து கறுப்புப் புகை வருவது போல எரிப்பார்கள். தேர்வு செய்யப்பட்டால் வெள்ளை புகை வெளியேறும் வகையில் எரிப்பார்கள்.
தேர்வுக்குப் பிறகு?
இந்த தேர்தல் முறையில் ஒரு பிஷப் தேர்வு செய்யப்பட்டால், அவர் முதலில் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வார். அவருக்கென ஒரு பெயரை மாற்றிக்கொண்டு அதையே தன் பெயராக அறிவிப்பார்.
சமீபத்திய தகவல்களின்படி, அடுத்த போப் யார் என்பது குறித்து எந்த உறுதியான கணிப்பும் இல்லை. இருப்பினும், அடிக்கடி விவாதங்களில் இத்தாலி, ஆப்பிரிக்கா, அல்லது ஆசியாவைச் சேர்ந்த கர்டினல்கள் பற்றிய பேச்சு எழுகிறது. ஏனெனில் திருச்சபை உலகளாவிய பிரதிநிதித்துவத்தை முக்கியமாகக் கருதுகிறது.