"கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்" - உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து CPIM மேல்முறையீடு!
தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "மதுரை உயர் நீதிமன்ற தனி நீதிபதி இளந்திரையன் அவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வைத்திருக்கின்ற கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென கடந்த 27.1.2025 அன்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட மேல்முறையீட்டு மனுவில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை 19(1)(a) & 19(1)(c) சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிரானது என்றும், நீதிமன்றத்திற்கு குறிப்பிட்ட விஷயம் குறித்து சட்டம் இயற்ற வேண்டுமென உத்தரவிட அதிகாரமில்லை எனவும், அது அரசின் நிர்வாக அதிகாரம் என்கிற சட்டப்பூர்வமான கருத்துகளை கணக்கில் கொள்ளாமல் போடப்பட்ட உத்தரவு என கூறியும், மேலும் கம்யூனிஸ்ட் கட்சி பல தியாகங்களை செய்து மக்களுக்காக பணியாற்றுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி, உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளை பிரதிபலிக்கின்ற அடையாள சின்னமாகும். அதை எடுக்க சொல்வது ஜனநாயக மீறலாகும் என்றும், கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு போடுவதற்கு முன் எங்கள் தரப்பு நியாயத்தை கேட்கவில்லை என்றும், எனவே மேற்கண்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஏற்கனவே ஒருவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 6.3.2025 அன்று தள்ளுபடி செய்ததை எதிர்த்து சிபிஐ(எம்) சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட மனுக்களை விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற தடையாணை உத்தரவு பிறப்பிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளனர்.