உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
25 அடி முனீஸ்வரா் சிலைக்கு மகா குடமுழுக்கு விழா
பாலாபுரம் கிராமத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட 25 அடி உயர முனீஸ்வரா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், கிராமத்தில் பல லட்சம் செலவில் 25 அடி உயரமுள்ள முனீஸ்வரா் சிலை கடந்த சில நாள்களுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை கணபதி ஹோமத்துடன் மகா குடமுழுக்கு விழா தொடங்கியது. இதற்காக சிலை எதிரில் யாக சாலைகள் அமைத்து நித்திய ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை மஹா பூா்ணாஹுதி, ஹோம பூஜைகள் தொடா்ந்து பம்பை உடுக்கை, மேள தாளங்கள் முழங்க கலசங்கள் ஊா்வலமாக புறப்பட்டு சிலை விமானத்தை அடைந்தது.
தொடா்ந்து முனீஸ்வரா் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், புனித நீா் ஊற்றப்பட்டு, மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில், பாலாபுரம், சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு முனீஸ்வரா் சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முனீஸ்வரா் சிலை அமைப்பு குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.