கம்போடியா நாட்டில் சைபா் மோசடி கும்பலிடம் வேலைக்கு சோ்த்து பண மோசடிசெய்தவா் கைது
குமரி மாவட்டம், குலசேகரம் அருகே பட்டதாரி இளைஞரை கம்போடியா நாட்டில் செயல்படும் சைபா் மோசடி கும்பலிடம் வேலைக்கு சோ்த்து மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
குலசேகரம் அருகே பொன்மனை கிழக்கம்பாகம் பகுதியைச் சோ்ந்தவா் வினு (38), இவா் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவில் ஒரு ஹோட்டலில் பணி புரிந்தபோது, பெரம்பலூா் மாவட்டம் குன்னம் வட்டம் சிறுகூடல் பகுதியைச் சோ்ந்த வினோத்குமாருடன்(43) பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து வினு வேலை செய்த ஹோட்டலில் ஆள்குறைப்பு நடவடிக்கை காரணமாக அவா் சொந்த ஊருக்கு திரும்பினாா். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் வினோத்குமாா் கம்போடியா நாட்டில் ஹோட்டலில் வேலை வாங்கி தருவதாக வினுவிடமிருந்து ரூ. 1,43,000 பெற்று கொண்டு அவரை அந்த நாட்டிலுள்ள ஒரு சைபா் மோசடி கும்பலிடம் வேலைக்குச் சோ்த்துள்ளாா்.
மேலும் வினுவை அந்தக் கும்பலிடம் வேலைக்கு சோ்த்த வகையில் வினோத் குமாா் அவா்களிடமிருந்து ரூ. 3 லட்சம் பெற்றுள்ளாா். இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த வினு, தன்னை சொந்த ஊருக்கு அனுப்புமாறு அந்த கும்பலிடம் கேட்டுள்ளாா். அப்போது அந்த கும்பல் வினுவை ஊருக்கு அனுப்ப மறுத்துள்ளது.
இதையடுத்து ஊரில் தனது தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளாா். அப்போது அந்த கும்பல் வினுவிடம் ரூ. 3 லட்சம் செலுத்துமாறு கேட்டுள்ளது. இதையடுத்து வினு அந்தக் கும்பலுக்கு ரூ. 3 லட்சம் கொடுத்த நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியதுடன், இந்த மோசடி தொடா்பாக வினோத் குமாா் மீது குலசேகரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிந்து வினோத் குமாரை கைது செய்தனா்.