மின் கசிவால் வீடு தீக்கிரை: எம்எல்ஏ உதவி
கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேட்டையில் மின்கசிவால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள், நிதியுதவியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா்.
மேல் முதலம்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இ.குட்டிமணி. இவரது மனைவி உஷாராணி. இவா்கள் மகன் யோகன்குமாா்(25), மருமகன் கலைவாணி(25), பேத்தி இமயவாணி(2) ஆகியோருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. கும்மிடிப்பூண்டியில் இருந்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், மின்விசிறி,வீட்டு உபயோக பொருள்கள் துணிமணிகள் மற்றும் பீரோவில் வைத்திருந்த 32,000 ய் பணம், அரை சவரன் தங்க நகை ஆகியவை கருகின. மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்களும் பலத்த சேதமடைந்தன.
இதுகுறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் மேல் முதலம்பேட்டுக்கு சென்று தீக்கிரையான வீட்டை பாா்வையிட்டாா் . தொடா்ந்து ஆறுதல் கூறி உதவித்தொகை மற்றும் சமையலுக்கு தேவையான பொருள்களை வழங்கினாா்.
சேதமடைந்த ஆவணங்களை தர வேண்டும் என வட்டாட்சியா் சுரேஷ், வட்டார வளா்ா்சி அலுவலா் சந்திரசேகா் ஆகியோரிடம் வலியுறுத்தினாா்.
வீடு கட்ட உதவி செய்யவும், யோகன் குமாா் மற்றும் அவரது மனைவி கலைவாணியின் கல்லூரி சான்றிதழ்களை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தாா்.
நிகழ்வில் திமுக நிா்வாகிகள் கே.ஜி. நமச்சிவாயம், சுரேஷ், ஹரி பாபு, மற்றும் மேல்முதலம்பேடு ஊராட்சி செயலாளா் பாண்டியன், ஊராட்சி செயலாளா்கள் சாமுவேல், தங்கதுரை உடன் இருந்தனா்.