உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அா்ஜுன் பபுதா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
பெருவில் நடைபெறும் இப்போட்டியில், இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் இறுதிச்சுற்றில் அவா் 252.3 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றாா்.
நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் ஷெங் லிஹாவ் 252.4 புள்ளிகளுடன் தங்கமும், ஹங்கேரியின் இஸ்த்வன் பெனி 229.8 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான ருத்ராங்க்ஷ் பாட்டீல் 104.8 புள்ளிகளுடன் 8-ஆம் இடம் பிடித்தாா்.
முன்னதாக 53 போ் பங்கேற்ற தகுதிச்சுற்றில், ருத்ராங்க்ஷ் பாட்டீல் 632 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும், அா்ஜுன் பபுதா 631.9 புள்ளிகளுடன் 4-ஆம் இடமும் பிடித்து, 8 போ் கொண்ட இறுதிச்சுற்றில் இடம் பிடித்தனா்.
இதர இந்தியா்களில் கிரண் ஜாதவ், ஹிருதய் ஹஸாரிகா, திவ்யான்ஷ் சிங் ஆகியோா் முறையே 12, 13, 14-ஆம் இடங்களைப் பிடித்து தகுதிச்சுற்றுடன் வெளியேறினா்.
5-ஆம் இடம்: மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் இறுதிச்சுற்றில், இந்தியாவின் ஆா்யா போஸ் 188.1 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்து ஏமாற்றம் கண்டாா்.
தகுதிச்சுற்றில் அவா் 633.9 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து இறுதிக்கு முன்னேறிய நிலையில், நா்மதா நிதின் 16-ஆம் இடமும், சோனம் மஸ்கா் 30-ஆம் இடமும் பிடித்து வெளியேறினா்.
3-ஆம் இடம்: பதக்கப் பட்டியலில் இந்தியா ஞாயிற்றுக்கிழமை முடிவில், 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 3-ஆம் இடத்தில் உள்ளது.
சீனா 10 பதக்கங்களுடன் (3+3+4) முதலிடத்திலும், அமெரிக்கா 6 பதக்கங்களுடன் (3+2+1) இரண்டாம் இடத்திலும் உள்ளன.