கார் பந்தயத்தில் அஜித் குமார் புதிய சாதனை!
பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
சமீப காலமாக கார் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்திவரும் அஜித் குமாருக்கு குட் பேட் அக்லி வெற்றியைத் தொடர்ந்து கார் பந்தயத்திலும் இந்த வெற்றி கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகான அஜித் குமார், தற்போது கார் பந்தயத்தில் முழுக்க கவனம் செலுத்தி வருகிறார். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களை நடிப்பதற்காகவும், எஞ்சிய மாதங்களில் முழுக்க கார் பந்தயத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சமீபத்தில் அறிக்கை மூலம் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தான் திட்டமிட்ட மாதங்களில் குட் பேட் அக்லி படத்தை நடித்து முடித்தார். பின்னணி வேலைகள் முடிந்து, சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விடாமுயற்சியில் ஏமாற்றமடைந்த அஜித் ரசிகர்கள், குட் பேட் அக்லி படத்தைக் கொண்டாடினர்.
படம் வெளியானதும் மீண்டும் கார் பந்தயத்தில் கவனம் செலுத்திய அஜித் குமாரின் அணி, தற்போது பெல்ஜியம் நாட்டில் ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் என்ற பந்தயத்தில் பங்கேற்றது.
இந்த பந்தயத்தில் அஜித் குமாரின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதித்துள்ளது. அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா இதனை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.