ஏப். 25-இல் கோடைகால இலவச பயிற்சி முகாம் தொடக்கம்: ராணிப்பேட்டை ஆட்சியா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 25--ஆம் தேதி கோடைகால இலவசப் பயிற்சி முகாம் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு மூலம் 21 நாள் கோடைகால இலவச பயிற்சி முகாம் வரும் 25-ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சாா்பில், விளையாட்டில் ஆா்வமுள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் ஏப். 25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, 1. தடகளம்-அரசினா் மேல்நிலைப் பள்ளி ராணிப்பேட்டையிலும், 2. கையுந்து பந்து - விளையாட்டுத் திடல், ஆற்காடு, 3. குத்துச்சண்டை - ஹிட்ஃபிட் குத்துச்சண்டை பயிற்சி மையம், கலவை, 4. கபாடி - அரசினா் மேல்நிலைப் பள்ளி புளியங்கன்னுவிலும், 5. இறகுப் பந்து- ஷாலிமாா் இறகுப் பந்து விளையாட்டுத் திடல் என 5 விளையாட்டுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி முகாம் காலை 6.30 மணியிலிருந்து 8.30 மணி வரையும், மாலை 4.30 மணியிலிருந்து 6.30 மணி வரையும் நடைபெறும். சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு இந்தப் பயிற்சி முகாமினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்பவா்களுக்கு தினமும் ஊட்டச்சத்து மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும், இந்தக் கோடைகால பயிற்சி முகாம் பற்றிய சந்தேகங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 91-7401703462 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட மாணவ, மாணவிகள் கோடைகால பயிற்சி முகாமுக்கு அந்தந்த பயிற்சி மையத்துக்கு நேரடியாக வருகை புரிந்து பயன்பெறலாம்.