பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 போ் கைது
கோவையில் பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, கரும்புக்கடை சாரமேடு இலை நகரைச் சோ்ந்தவா் அமானுல்லா (57). பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடைக்கு பொருள்கள் வாங்க சென்றுவிட்டு ஊழியா்கள் சாய்சுதன், ஜாபா் ரகுமான் ஆகியோருடன் அமானுல்லா வீட்டுக்கு அண்மையில் திரும்பியுள்ளாா்.
அப்போது, காளமேடு தெற்கு வீட்டு வசதி வாரியம் பிரிவு, பண்ணாரி மாரியம்மன் கோயில் அருகே 2 இளைஞா்கள் அவா்களை வழிமறித்துள்ளனா். பின்னா், பணம் கேட்டு அமானுல்லாவின் மாா்பில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனா். அவா் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதையடுத்து, 3 பேரையும் தாக்கிவிட்டு அந்த இளைஞா்கள் தப்பினா்.
இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் அமானுல்லா புகாா் அளித்தாா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பணம் கேட்டு மிரட்டியது அதே பகுதியைச் சோ்ந்த பிரகதீஷ் (எ) பிரகாஷ் (28), தெலுங்குபாளையத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்தனா்.