'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனி...
சென்னை: 12 வயதில் மாயமான சிறுமி 18 வயதில் மீட்கப்பட்டது எப்படி?
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றம்). இவர் லேப் ஒன்றில் உதவியாளராக இருந்து வருகிறார். இவரின் 12 வயதான மகள் அரும்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1.11.2018-ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் பின்னர் வீடு திரும்பிவரவில்லை. அதனால் மாணவியின் அம்மா அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
ஆனால், சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால் அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஆனால் மகளை தேடும் முயற்சியை ரம்யா கைவிடவில்லை. தன்னுடைய மகள் படித்த பள்ளி, அவளின் தோழிகள் என ஒவ்வொருவரிடமும் விசாரித்துக் கொண்டே இருந்தார்.

இதற்கிடையில் மாயமான சிறுமியின் புகைப்படத்தை அரும்பாக்கம் போலீஸார் அனைத்து மாவட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பியும் விசாரித்தனர். இந்தச் சமயத்தில்தான் 2018-ல் காணாமல் போன ரம்யாவின் மகள், கடலூரில் உள்ள காப்பகம் ஒன்றில் இருப்பதாக அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சிறுமியின் குடும்பத்தினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அதனால் மகிழ்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு கடலூரில் உள்ள காப்பகத்துக்கு போலீஸார் சென்றனர். அங்கு 2018-ல் மாயமான 12 வயதான சிறுமி, 18 வயது இளம்பெண்ணாக வளர்ந்திருந்தாள்.
தன்னுடைய மகளைப் பார்த்த ரம்யாவும் அம்மாவைப் பார்த்த அந்தப் பெண்ணும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர்விட்டனர். அந்தப் பாச காட்சியைப் பார்த்தவர்களின் கண்கள் குளமாகின.
இதையடுத்து `இவள்தான் காணாமல் போன என் மகள்' என ரம்யா, போலீஸாரிடம் சொல்ல, சட்டப்படி அவரை காப்பகத்திலிருந்து அழைத்து வர அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சட்டப்படி நடவடிக்கை எடுத்தார். அதைத் தொடர்ந்து அந்த இளம்பெண்ணை, அவரின் பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். அதனால் அந்தக் குடும்பமே மகிழ்ச்சியடைந்தது. மகளோடு வீடு திரும்பிய ரம்யா, போலீஸாருக்கு நன்றிகளை தெரிவித்தார்.
இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸாரிடம் சிறுமியை மீட்டது எப்படி என பேசினோம். ``மாயமான சிறுமி கடலூர் காப்பகத்திலிருக்கும் தகவலை எங்களுக்கு ஒருவர் தெரிவித்தார். அதன்அடிப்படையில்தான் சென்னையிலிருந்து ஒரு போலீஸ் டீம் கடலூருக்குச் சென்று விசாரித்தது. காணாமல் போன சிறுமியின் புகைப்படமும் அவரின் அங்க அடையாளங்கள் மட்டுமே எங்களிடம் ஆதாரமாக இருந்தது. அந்த அடையாளங்கள் அடிப்படையில்தான் மாயான சிறுமி கடலூர் காப்பகத்திலிருப்பதை உறுதிப்படுத்தினோம். 12 வயதில் சிறுமி காணாமல் போனபோது அவருக்கு ஞாபக மறதி இருந்திருக்கிறது. அதனால்தான் தன்னுடைய குடும்ப விவரங்களை அவரால் காப்பகத்தில் உள்ளவர்களிடம் சொல்ல தெரியவில்லை. அதனால் காப்பகத்திலிருப்பவர்களும் சிறுமியை பெற்றோர் இல்லாதவர் என்று கருதியே அங்கு இத்தனை ஆண்டுகள் தங்க வைத்திருக்கிறார்கள். இதையடுத்து சென்னையில் மகளைத் தேடிக் கொண்டிருக்கும் ரம்யாவுக்கு தகவல் தெரிவித்து அவரை கடலூருக்கு அழைத்துச் சென்றோம். ரம்யாவும் தன்னுடைய மகளை அடையாளம் காட்டினார். பின்னர் சட்ட நடவடிக்கைகளை முடித்து இளம்பெண்ணை அவரின் அம்மாவுடன் அனுப்பி வைத்திருக்கிறோம்.
எத்தனையோ குற்ற வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்திருந்தாலும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாயமான சிறுமியை மீட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.
இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அரும்பாக்கம் போலீஸாரை, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டினார்.