'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனி...
சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!
சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்தார். அதைப் பார்த்து பிரபு என்பவர் ஜெயபிரகாஷை தொடர்பு கொண்டு வரன் தொடர்பாக பேசினார். பின்னர் ஜெயபிரகாஷ் தன்னுடைய போட்டோவை பிரபுக்கு அனுப்பி வைத்தார். அதைப்போல பிரபுவும் தன்னுடைய மகள் தாரணியின் போட்டோவை ஜெயபிரகாஷுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து திருமணம் குறித்து ஜெயபிரகாஷ் குடும்பத்தினருடன் மணமகளின் அப்பா பிரபு, அவரின் மனைவி ஜெயந்தி, தாரணியின் சகோதரி சரண்யா ஆகியோர் போனில் பேசி வந்தனர். பின்னர் தாரணியை ஜெயபிரகாஷுக்கு திருமணம் செய்து கொடுக்க இரண்டு குடும்பத்தினரும் பேசி முடிவெடுத்தனர். அதன் பிறகு ஜெயபிரகாஷும் தாரணியும் போனில் பேசி வந்தனர்.

இதையடுத்து ஜெயபிரகாஷை மாப்பிள்ளை, மாப்பிள்ளை என உரிமையோடு தாரணியின் குடும்பத்தினர் அழைத்து வந்தனர். அதனால் ஜெயபிரகாஷும் தாரணியின் குடும்பத்தினர் மீது பாசமாகவே இருந்துவந்தார். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய தாரணியின் குடும்பத்தினர் ஜெயபிரகாஷிடம் அவசர தேவை என அவ்வப்போது கூறி பணம், செல்போன், புதிய வீடு குடியிருக்க அட்வான்ஸ் என கேட்டு வாங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் ஜெயபிரகாஷ், 17 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருக்கிறார். அதோடு தாரணியின் குடும்பத்தினருக்கு 4 செல்போன்களையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஜெயபிரகாஷ்.
இதையடுத்து தாரணியை உங்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க முடியாது என ஜெயபிரகாஷிடம் தாரணியின் அப்பா பிரபு தெரிவித்தார். அதனால் ஷாக்காகிப் போன ஜெயபிரகாஷ், தாரணி குடும்பத்தினரை நேரில் சந்திக்கச் சென்றார். அங்கு வீடு பூட்டியிருந்தது. செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஜெயபிரகாஷ், திருமண ஆசையை காண்பித்து பணம் வாங்கி தன்னை ஏமாற்றி விட்டதாக தாரணியின் குடும்பத்தினர் மீது கடந்த 2024-ல் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து தாரணியின் குடும்பத்தினரை தேடிவந்தனர். இந்த நிலையில் அமைந்தகரையில் உள்ள ஆண்கள் விடுதியில் தலைமறைவாக இருந்த பிரபுவை போலீஸார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிரபுவை சிறையில் அடைத்தனர்.

இது குறித்து அமைந்தகரை போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட பிரபுவும் அவரின் குடும்பத்தினரும் கூட்டாக சேர்ந்து ஜெயபிரகாஷிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதில் பிரபுவை கைது செய்துவிட்டோம். அவரிடம் விசாரித்தபோது பிரபுவின் குடும்பத்தினர் தலைமறைவாக இருக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையில் ஜெயபிரகாஷிக்கு திருமணம் செய்து கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கப்பட்ட தாரணிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் தாரணியும் குற்றம்சாட்டப்பட்டவர் என்பதால், அவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை பாயும். குடும்பத்தினரோடு தங்கியிருந்தால் அனைவரும் மாட்டிக் கொள்வோம் எனக் கருதி பிரபு மட்டும் ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து கிடைத்த வேலைகளைச் செய்து வந்திருக்கிறார். தற்போது பிரபு சிக்கியதையடுத்து அடுத்து அவரின் குடும்பத்தினரை எளிதில் கைது செய்துவிடுவோம்" என்றனர்.