`ஆவினில் வேலை' ரூ.3கோடி மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தா...
சொல்வதெல்லாம் சர்ச்சை.. உச்ச நீதிமன்ற கண்டனத்துக்கு உள்ளாகும் நீதிமன்றம்!
"இந்த உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது. தற்போது, இதே நீதிமன்றத்திலிருந்து வேறொரு நீதிபதி இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஏன் இதுபோன்ற கருத்துகள் வெளியிடப்பட வேண்டும்?" என்று உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியிருக்கிறது.
அந்த உயர் நீதிமன்றம் வேறெதுவும் இல்லை. அண்மைக் காலமாக தொடர் சர்ச்சையில் சிக்கித் தவித்துவரும் அலாகாபாத் உயர் நீதிமன்றம்தான்.
அலாகாபாத் நீதிமன்ற நீதிபதிகள் அளிக்கும் உத்தரவுகளும், தீர்ப்புகளும், அவ்வளவு ஏன்?, வழக்கு விசாரணையின்போது சொல்லும் கருத்துகள் கூட கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.
இன்று ஒரே நாளில் உச்ச நீதிமன்றம், அலாகாபாத் உயர் நீதிமன்ற நடவடிக்கையை இரண்டு வழக்குகளில் கண்டித்திருக்கிறது. அதுவே இன்றைய பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது.
அலாகாபாத் உயர் நீதிமன்றம், குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு பிணை வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும்போது கவனக்குறைவாக செயல்படக் கூடாது என்று கண்டித்திருப்பதோடு, இதுபோன்றவர்கள் சமூகத்துக்கே ஆபத்தானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
மீண்டும் மற்றொரு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அடங்கிய அமர்வு, ஆண் நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம், பெண், தனக்குத் தானே பிரச்னையை ஏற்படுத்திக்கொண்டார் என்பது போல கருத்துத் தெரிவித்திருந்தது குறித்து தன்னுடைய கவலையை பதிவு செய்திருக்கிறது.
மார்ச் 11ஆம் தேதி, பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கிய அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங் தெரிவித்த கருத்துதான் இன்று உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் கூறுகையில், இது மற்றொரு வழக்கில், மற்றொரு நீதிபதி பிறப்பித்திருப்பது, ஆமாம், இந்த வழக்கில் சட்ட நடைமுறைகளின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணே பிரச்னையை ஏற்படுத்திக்கொண்டார் என்பது போன்ற வாதங்கள் ஏன் எழுந்தன? இதுபோன்ற விவகாரங்களில் ஒருவர் அதுவும் நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்போது கவனமுடன் இருக்க வேண்டும் என்று பதிவு செய்திருக்கிறார்.
இவ்விரண்டு கண்டனங்களும் இன்று ஒரே நாளில் உச்ச நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டவை.
இது மட்டுமல்லாமல், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில், ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கில், சிறுமியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அது பாலியல் வன்கொடுமை முயற்சியே இல்லை என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, குற்றவாளிகளுக்கு குற்றத்தைக் குறைத்து அறிவித்திருந்தது.
நல்லவேளையாக, இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கும் எடுத்துக்கொண்டது. அலாகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் உத்தரவும் நிறுத்திவைக்கப்பட்டது. அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.ஜி. மாசி ஆகியோர் கொண்ட அமர்வு, முற்றிலும் அறிவைப் பயன்படுத்தாத, மனிதத் தன்மையற்ற அணுகுமுறை என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கில், மத்திய அரசுக்கும், உத்தரப்பிரதேச அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்ததோடு இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தன்னையும் இணைத்துக்கொள்ள முழு சுதந்திரம் வழங்கியிருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக, பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி, பாதிக்கப்பட்ட பெண்ணை மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையோடு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டபோதுதான் அலாபாகாத் உயர் நீதிமன்றத்தின் இதுபோன்ற உத்தரவுகள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியது.
பிப்ரவரி 20ஆம் தேதி, நீதிபதி கிஷண் பாஹல் பிறப்பித்த உத்தரவில், பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணை, சிறையிலிருந்து வெளியாகி 3 மாதத்துள், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையோடு பிணை வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்க அடிப்படைக் காரணம் என்ன என்பதும், இந்த நிபந்தனை தொடர்பாக புகார்தாரரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியதா என்பது குறித்தும் தகவல்கள் இடம்பெறவில்லை.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானபோதுதான், அலாகாபாத் உயர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அளித்த முந்தைய உத்தரவுகள் குறித்தும் சில தகவல்கள் வெளியாகின.
இதே அலாகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து தில்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ வீட்டில்தான் கட்டுக்கட்டாக பணம் தீ விபத்தில் எரிந்த நிலையில், கொலீஜியத்தால், அவர் மீண்டும் அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கே மாற்றப்பட்டு பணிகள் எதுவும் ஒதுக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு நீதிமன்றம் அளிக்கும் பரபரப்பான தீர்ப்புகள் தலைப்புச் செய்தியாகவும் முக்கிய தலைப்பாகவும் மாறும். ஆனால், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், உத்தரவுகள், கருத்துகள் கூட அண்மைக்காலமாக எதிர்மறையான வகையில் செய்தியாகி வருகிறது.
இந்த நிலையில்தான், என்ன நடக்கிறது இந்த உயர் நீதிமன்றத்தில் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.