Chahal: "என்னையும், என் திறமையையும் நாம் நம்புகிறேன்" - வெற்றியின் ரகசியம் சொல்லும் ஆட்ட நாயகன் சஹல்
சண்டிகரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற கொல்கத்தா vs பஞ்சாப் போட்டி ஐபிஎல்லின் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாகப் பதிவாகியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பாஞ்சாப் அணியின் பவுலர்களே. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் 111 ரன்கள் மட்டுமே குவித்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 8 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 62 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது.

ஆனால், பஞ்சாப் பவுலர்களின் அசாத்திய பந்துவீச்சில் நிலைகுலைந்த கொல்கத்தா, அடுத்த 33 ரன்களுக்கு மீதமிருந்த ஏழு விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் சாதனை வெற்றிபெற்றது. பஞ்சாப் தரப்பில் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்திய சஹல் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
மனஉறுதி மேலும் அதிகமாகும்
விருது வென்றபின் பேசிய சஹல், "இந்த வெற்றி என்பது அணியின் கூட்டு முயற்சி. முதலில் நாங்கள் நேர்மறையாக இருக்க விரும்பினோம். மேலும், பவர்பிளேயில் 2, 3 விக்கெட்டுகள் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். எதிரணி ஸ்பின்னர்கள் பந்துவீசும்போது அது நன்றாகத் திருப்புவதை நாங்கள் பார்த்தோம். அது எங்களுக்கும் உதவியது. நான் பந்துவீசும்போது முதல் பந்தே திரும்பியது. ஸ்ரேயாஸ் என்னிடம் வந்து ஸ்லிப் வேண்டுமா என்று கேட்டார். நாங்கள் குறைவான ரன்கள் அடித்ததால், விக்கெட் எடுத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். கடந்த போட்டியில் நான் 4 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்தேன்.

ஆனாலும், என்மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. என்னையும், எனது திறமையையும் நானே ஆதரித்தேன். பேட்ஸ்மேன்களை எப்படி அவுட்டாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. பந்தின் வேகத்தை மாற்றிக் கொண்டே இருந்தேன். அதை அவர்கள் அடிக்க வேண்டும் என்றால், அதற்கான முயற்சியை அவர்கள் செய்ய வேண்டும். இதுபோன்ற போட்டிகளில் வெற்றிபெறும்போது, அணியின் மனஉறுதி மேலும் அதிகமாகும். பஞ்சாப் அணிக்காக என்னுடைய முதல் ஆட்ட நாயகன் விருது இது. என்னுடைய திறமைகளை நானே ஆதரித்து, என்னை நான் முழுமையாக நம்பினால் வெற்றிபெறுவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.