அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு கோரி அமித் ஷாவுக்கு கடிதம்!
தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன்: நீதிபதி குரியன் ஜோசப்
தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன் என்று மாநில உரிமைகளை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க உயா்நிலைக் குழு அமைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று அறிவிப்பு வெளியிட்டாா்.
இந்த குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்பை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார். இதன் உறுப்பினா்களாக இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக் வரதன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவா் மு.நாகநாதன் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது பற்றி நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்ததாவது:
“மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆய்வு செய்வது அவசியம். இரு அரசுகளுக்கு இடையே நிதி சார்ந்த கொள்கைகள், நிர்வகிக்கும் அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்.
அரசு அமைத்துள்ள இந்த குழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும். என்னை தலைவராக நியமித்த முதல்வருக்கு நன்றி. இந்தப் பணிக்காக அரசிடமிருந்து எந்த ஊதியமும் பெற மாட்டேன் என்று நான் வைத்த கோரிக்கையை ஏற்றதற்கு முதல்வருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த உயா்நிலைக் குழு தனது இடைக்கால அறிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.