குன்னூர்: வீட்டிற்குள் நுழையும் குரங்குகள், அறவே தவிர்க்க அறிவுறுத்தும் வனத்துறை - காரணம் இதுதான்!
நீலகிரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் குரங்குகளின் நடமாட்டம் இயல்பு தான் என்றாலும், அண்மை காலமாக குடியிருப்புகளைச் சுற்றியும், சாலையோரங்களையும் குரங்குகள் தங்களின் நிரந்தர வாழ்விடமாக மாற்றும் துயர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் வீசிச் செல்லும் திண்பண்டக் கழிவுகள் மற்றும் கிராமங்களில் கொட்டப்படும் உணவு கழிவுகளுக்குக் காத்துக் கிடக்கும் அவல நிலையும் இயல்பாகி வருவது கூடுதல் வேதனை. குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என வனத்துறை வலியுறுத்தியும் அத்துமீறும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

குன்னூர் அருகில் உள்ள புதுக்காடு பழங்குடியினர் கிராமத்தில் குரங்குகள் கூட்டமாக சென்று உணவு தேடி அலையும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாள்களாக அந்த பகுதியில் நடமாடி வரும் இரண்டு குரங்கு குட்டிகள் பழங்குடி சிறுவர்களிடம் பிடிவாதமாக உணவு கேட்டு வருகின்றன. குரங்குகளை தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து குன்னூர் வனத்துறையினர், " கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், மா , பலா போன்ற பழங்களின் சீசனும் தொடங்கியிருக்கிறது. பழங்களைச் சுவைக்க குடியிருப்பு பகுதிகளுக்கு குரங்குகள் வருகின்றன. மேலும் உணவுகளால் ஈர்க்கப்படும் குரங்குகள் வீட்டிற்குள் நுழைந்து உணவு தேடுகின்றன. குரங்குகளின் எச்சில், சிறுநீர் போன்றவற்றில் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவும் அபாயம் இருக்கிறது.

தேவையற்ற உணவுகளை உண்பதால் அவற்றிற்கும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. சாலையோரத்தில் சுற்றுலா பயணிகள் வீசியச் செல்லும் உணவுகளை எடுக்க போட்டிப்போடுவதால் வாகனங்களில் சிக்கி உயிரிழப்பதும், கை கால்களை இழப்பதும் தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற செயல்களை ஈடுபட வேண்டாம். குரங்குகளை அறவே தவிர்க்க வேண்டும். அது தான் அவற்றுக்கும் நல்லது" என்றனர்.