ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்: மோஹித் சர்மா
தில்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என மோஹித் சர்மா கூறியுள்ளார்.
தில்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருக்கிறது. தில்லியில் இன்றிரவு (ஏப்.16) ராஜஸ்தான் அணியுடன் மோதவிருக்கிறது.
இந்த அபார வெற்றிக்கு முக்கிய காரணமாக அதன் பந்துவீச்சாளர்களே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
குல்தீப் யாதவ் 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் வரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கிறார்.
சிஎஸ்கேவின் நூர் அகமது 7 போட்டிகளில் 12 விக்கெட்டுகளுடன் இருக்கிறார். குல்தீப் யாதவ் குறைவான போட்டிகளிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இது குறித்த சக தில்லி வீரரும் வேகப் பந்துவீச்சாளருமான மோஹித் சர்மா கூறியதாவது:
தில்லி கேபிடல்ஸ் மட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் சீசனிலேயே குல்தீப் யாதவ்தான் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவர் பந்துவீசும் விதம் அணிக்கு மிகவும் நல்லதாக அமைந்துள்ளது.
அக்ஷர் படேல் குல்தீப் யாதவை பயன்படுத்தும் விதம் அற்புதமாக இருக்கிறது.
விக்கெட் தேவைப்படும்போதும் பார்ட்னர்ஷிப் அமைந்து எங்களுக்கு அழுத்தம் ஏற்படும்போதும் குல்தீப் யாதவ் உதவுகிறார் என்றார்.