சிஎஸ்கேவில் மற்றொரு இளம் வீரர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மற்றொரு இளம் வீரர் இணைந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து நடந்த 5 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியது. இதனால் சிஎஸ்கே அணி கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
ஏற்கெனவே காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியிருந்த நிலையில் அவருக்கு மாற்றாக தோனி அணியை வழிநடத்தி வருகிறார். அதைத்தொடர்ந்து இளம் வீரர் ஷேக் ரசீத் கடந்த ஆட்டத்தில் அணியில் இடம்பெற்று அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
விக்கெட் கீப்பர் செய்த தவறினால் நோ பால்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!
இதனிடையே காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் வெளியேறி உள்ளார். அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக வரும் 20ஆம் தேதி நடக்கும் ஆட்டத்தில் சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மற்றொரு இளம் வீரரும் இணைந்துள்ளார். காயம் காரணமாக விலகிய ருதுராஜ்க்கு பதிலாக 17 வயதான அதிரடி பேட்டர் ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டுள்ளார். இதனை சிஎஸ்கே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.