`பணம் திருடியதாக சந்தேகம்’ வேதனையில் 4வது மாடியில் இருந்து விபரீத முடிவெடுத்த கோவை மாணவி
கோவை நவ இந்தியா பகுதியில் இந்துஸ்தான் மருத்துவமனை இயங்கி வருகிறது. அவர்களுக்கு சொந்தமாக பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியும் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா (18) என்ற மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை மருத்துவமனை வளாகத்தின் 4 வது தளத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென மாணவி அனுப்பிரியா மாலை அந்த நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்.
தகவலறிந்த பீளமேடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி அந்த கல்லூரிக்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். அவர் விடுதியில் தங்கியிருந்த நிலையில், அந்த மாணவியின் பர்ஸில் இருந்த ரூ.1,500 காணாமல் போயுள்ளது. இதுதொடர்பாக அனுப்பிரியா மீது சந்தேகப்பட்டுள்ளனர்.

வேதனையடைந்து...
தொடர்ந்து அவரிடம் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் தான் பணம் எடுக்கவில்லை என்ற திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இருப்பினும் அனைவரின் முன்னிலையில் விசாரணை நடைபெற்றதால் அவர் இந்த சம்பவத்தை அவமானமாக எடுத்து வேதனையடைந்து அனுப்பிரியா இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. “அனுப்பிரியா தான் பணம் எடுத்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாமல் அவரை எப்படி சந்தேகப்பட்டு அவமானப்படுத்தலாம்.” என்று சக மாணவ, மாணவிகள் இன்று காலை கல்லூரி வளாகத்தை முற்றுகையிட்டும், கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மகள் இறந்த தகவல் கிடைத்து அனுப்பிரியாவின் பெற்றோர் சோகத்துடன் கோவை வந்தனர். இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் பீளமேடு காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அனுப்பிரியாவின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவியின் உடலை வாங்குவோம் என உறவினர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இந்துஸ்தான் கல்லூரி முதல்வர் மணிமொழி அளித்துள்ள விளக்கத்தில், “மருத்துவமனைக்கு பயிற்சிக்கு வந்த மாணவியின் பணம் தான் காணாமல் போனது. மருத்துவமனை தரப்பில்தான் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தான் அனுப்பிரியாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அவரிடம் மட்டுமல்ல மற்ற மாணவர்கள், ஊழியர்கள் உள்பட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவரை குற்றவாளி என்று எல்லாம் நாங்கள் சொல்லவில்லை. விளக்க கடிதம் மட்டுமே கேட்டோம். இதுதொடர்பாக அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் சொல்லியிருந்தோம்.” என்றார்.
