மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!
`ரயில்வே போலீஸுக்கு வேலை செஞ்சவன், இன்னைக்கு `ஏ’ கேட்டகிரி ரௌடி’ - காட்பாடி அலெக்ஸின் க்ரைம் ஹிஸ்டரி
வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி அலெக்ஸ். வழிப்பறிக் கொள்ளை, கொலை என 38 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அலெக்ஸ் `ஏ’ கேட்டகிரி ரௌடியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். கடந்த 12-10-2016 -லிருந்து தொடர்ந்து 8 ஆண்டுகளாக காட்பாடி உட்கோட்ட காவல்துறையினர் அலெக்ஸின் க்ரைம் ஹிஸ்டரியை பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்கின்றனர்.
கன்னியாகுமரி டு அரக்கோணம்... சடலத்தை மீட்கிற வேலை
அந்தப் பக்கங்களை நாமும் புரட்டிப் பார்க்கும்விதமாக, ரௌடி அலெக்ஸின் பின்னணி குறித்து காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ``ரௌடி அலெக்ஸ் (வயது 33) கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன். அவனோட சின்ன வயசுலயே அப்பா, அம்மா இறந்துட்டாங்க. உறவுனு சொல்லிக்க ஒரு அக்கா மட்டும் இருந்துருக்காங்க. பிழைப்புத் தேடி சொந்த ஊர்லருந்து வெளியேறினான் அலெக்ஸ். எங்கெங்கேயோ அலைஞ்சு திரிஞ்சிட்டு கடைசியா ரெயில் மூலம் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்து இறங்கினான்.

ரெயில் நிலைய வளாகத்துக்குள்ளேயே சுத்திக்கிட்டிருந்ததுனால ரெயில்வே போலீஸார் சந்தேகப்பட்டு பிடிச்சி விசாரிச்சிருக்காங்க. அப்பா, அம்மா இல்லைனு தன்னோட கதைய சொன்னதும் பரிதாபப்பட்ட போலீஸார், தண்டவாளத்துல அடிப்பட்டு இறந்து கிடக்குற சடலத்தை மீட்கிற வேலைக்கு அலெக்ஸை பயன்படுத்திக்கிட்டாங்க. போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயே படுத்துக்கிடந்து... ரெயில் பயணிகள் கொடுக்குற கம்ப்ளைண்ட், அதுக்கு போலீஸ் எடுக்குற ஆக்ஷன், குற்றவாளிகள் தப்பிக்கிற ரூட்டுனு க்ரைம் நுணுக்கத்தை கத்துக்கிட்டான்.
பின்னர், ரெயில்ல சமோசா வித்துக்கிட்டு இருந்த காட்பாடி அக்ராவரத்தைச் சேர்ந்த ஜாஃபர் என்கிற வினோத்குமாரையும் தன்னோடு கூட்டு சேர்த்துக்கிட்டு, ரெயில் பயணிகள்கிட்ட இருந்து செல்போன், செயின் பறிப்புல ஈடுபட ஆரம்பிச்சுட்டான். `பி’ கேட்டகிரி ரௌடியான ஜாஃபர் மேலயும் 10-க்கும் அதிகமான குற்ற வழக்குகள் பதிவாகியிருக்கு. ரெண்டு பேரும் காட்பாடி பகுதியில பெரிய ரௌடியாக பேர் எடுக்கணும்னு ஆசைப்பட்டு, பிரபல கூலிப்படை தலைவனான `ஏ பிளஸ்’ கேட்டகிரி ரௌடி ஜானி என்கிற ஜான் பால்ராஜிடம் அடியாட்களாக சேர்ந்தாங்க.
ஜானி முதல் இடம், அலெக்ஸ் அஞ்சாவது இடம்...
ஜானி கத்துக்கொடுத்த வித்தையால காட்பாடி சுற்றுவட்டாரத்துல அலெக்ஸ் நிறைய சம்பவங்கள் செய்ய ஆரம்பிச்சான். இதையடுத்து 2016-ல் அலெக்ஸ் பெயரும் ரௌடி லிஸ்ட்டுல சேர்க்கப்பட்டுச்சி. இப்போ, காட்பாடி உட்கோட்ட காவல்துறையின் ஹிஸ்டரி ஷீட் லிஸ்ட்டுல மொத்தம் 136 ரௌடிகள் இருக்காங்க. இதில், ஜானி முதல் இடத்துலயும், அலெக்ஸ் அஞ்சாவது இடத்திலயும் இருக்கானுங்க. பேர் எடுத்த பிறகு ஜானிகிட்ட இருந்து தனியா பிரிஞ்சி வந்து தொழில் பண்ண ஆரம்பிச்சான் அலெக்ஸ்.

2023 ஜனவரி மாசம், கே.வி.குப்பம் தாலுகா லத்தேரிக்கு அருகிலுள்ள பி.என்.பாளையம் ஊராட்சிப் பகுதியில பால் வியாபாரி ஒருத்தரை அலெக்ஸ் தலைமையிலான கூலிப்படை கும்பல் சுத்துபோட்டு கொடூரமா வெட்டிக் கொன்னாங்க. இந்த மாதிரி இன்னும் ரெண்டு மூணு கொலை வழக்குலயும் அலெக்ஸுக்கு தொடர்பிருக்கு. கிருஷ்ணகிரி பக்கம் ஓடுற பேருந்துல இருந்து ஒருத்தர்கிட்ட ரூ.86 லட்சம் ஹவாலா பணம் வழிப்பறி பண்ணிட்டு ஓடுன கேஸுலயும் சம்பந்தப்பட்டுருக்கான் அலெக்ஸ். இவனோட தாக்குதல் ஸ்டைலும் பயங்கரமாகத்தான் இருக்கும்.
மாட்டுவண்டிக்குப் பயன்படுத்துற அச்சாணியை, ஷார்ப்பா தீட்டி அதையே ஆயுதமாக இடுப்புல சொருகி வச்சிருப்பான். சம்பவத்துல ஈடுபடும்போது முதல்ல பெப்பர் ஸ்பிரே அடிப்பான். அப்புறம் அச்சாணி ஆயுதத்தை எடுத்து தோள்பட்டைல ஓங்கிக் குத்தி உள்ள இறக்குவான். தாக்குதலுக்கு ஆளாகுற நபர், கையைத் தூக்க முடியாம துடிக்கும்போது வேலைய முடிச்சிட்டு அலெக்ஸ் எஸ்கேப் ஆகிடுவான். ஆளைப் பார்த்தா அப்பாவி மாதிரி தெரிவான். இவனா அந்த சம்பவத்தை பண்ணிருப்பான்னு தோணும். ஆனா, கொடூரமான குற்றவாளி.
செம்மரக்கடத்தல் மாஃபியாக்களோடயும் டீலிங்...
இன்னும் திருமணம் ஆகல. பாலியல் தொழில்ல ஈடுபடுற பெண்கள்கிட்டயும் தொடர்பு இருக்கு. இதனிடையே, காட்பாடில ஒரு பொண்ண லவ் பண்ணிக்கிட்டு இருந்தான். அது என்னாச்சினு தெரியல. இப்போ ஆந்திராவுல ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி பழகிக்கிட்டு இருந்தான்.

நீதிமன்ற விசாரணக்கு ஆஜராகாம தலைமறைவா பதுங்கி இருந்தவன் மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு உட்பட பல வழக்குகள்லயும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுருக்கு. இதையடுத்து வேலூர் எஸ்.பியோட ஸ்பெஷல் டீம், அவனோட கேங்ல இருக்குற ஆளுகளையும், லிங்க்ல இருந்த கோ அக்யூஸ்ட்டுகளையும் விசாரிச்சாங்க. அப்பதான் ஆந்திராவுல செம்மரக்கடத்தல் மாஃபியாக்களோடயும் டீலிங் வச்சிக்கிட்டு, அங்கருந்து கட்டை கடத்துறான் அலெக்ஸ்னு தெரிஞ்சது.
திம்மதிபாளையம்கிற ஏரியாவுல பதுங்கியிருந்த அலெக்ஸை கடந்த 12-4-2025 அன்று நடுராத்திரில கைது பண்ணாங்க. விசாரணைக்குப் பிறகு சிறையில அடைக்கப்பட்டுருக்கான். இவன் மேல இருக்குற பெண்டிங் வழக்குல விரைவா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுறதுக்கான வேலைகளும் நடந்துக்கிட்டுருக்கு...’’ என்றனர்.
அலெக்ஸ் மாதிரியான குற்றவாளிகள் சரியான விசாரணைக்கு பின், விரைவாக தண்டிக்கப்பட வேண்டும்!