நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது
சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். சமூக வலைதளத்தில் நட்பாக பழகி வந்த இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 16-ம் தேதி இரவு 7 மணிக்கு முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒர் இடத்தைக் குறிப்பிட்ட அமீன், அங்கு மாணவனை வரும்படி தெரிவித்திருக்கிறார். அதனால் மாணவனும் அந்த இடத்துக்கு பைக்கில் சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் அமீன் அங்கு வரவில்லை. அதனால் அங்கிருந்து மாணவன் புறப்பட்டிருக்கிறார். அப்போது அங்க வந்த ஒருவர், மாணவனிடம் லிஃப்ட் கேட்டிருக்கிறார். அதனால் மாணவனும் அந்த நபரை பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார்.

முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரவாசல் தெருவில் நின்றுக் கொண்டிருந்த ஆட்டோ அருகே மாணவனை பைக்கை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் அந்த நபர். பைக்கை நிறுத்தியதும் ஆட்டோவிலிருந்த இரண்டு பேர், மாணவனை பைக்கில் ஏறும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். இதையடுத்து மாணவனை ஏற்றிக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தண்டவாளத்துக்கு அருகில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு சென்ற பிறகு அந்தக் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி மாணவனிடம் ஒரு வாரத்துக்குள் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். அதன்பிறகு ஒரு மாதத்தில் 100 கிராம் தங்கம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அப்போது அந்தக் கும்பலிடம் தன்னை விட்டுவிடும்படி மாணவன் கெஞ்சியிருக்கிறார். உடனே அந்தக் கும்பல், `உன் குடும்ப விவரம் எனக்குத் தெரியும், நீ பணம் தங்கம் கொடுக்கவில்லை என்றால் உன் குடும்பத்தையே காலி செய்து விடுவோம்' என்று மிரட்டியிருக்கிறார்கள். இதையடுத்து அங்கிருந்து தப்பிய மாணவன், இரவு ரோந்து பணி போலீஸாரிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார். அதன் பிறகு மாணவன் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சென்னை பாரிமுனையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வசந்த் என்கிற வசந்தபாலன் (33), பிராட்வே பகுதியைச் சேர்ந்த விஜி என்கிற விஜயகுமார் (31) ஆகியோரை கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புரை சிலரை போலீஸார் தேடிவருகிறார்கள்.