உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர். கவாய்!
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாயை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளார்.
முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதி பதவியை ஏற்கும் இரண்டாவது தலித் நீதிபதி கவாய் ஆவார்.
அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்க தற்போதைய தலைமை நீதிபதியிடன் மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது.
அதனடிப்படையில், பி.ஆர். கவாய் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு உறுதி செய்யப்படும்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் வருகின்ற மே 13 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
இதையடுத்து, 52-ஆவது தலைமை நீதிபதியாக மே 14 ஆம் தேதி பி.ஆர். கவாய்-க்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவியேற்கவுள்ளார்.
இவர், நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகத் தொடர்வார்.
பி.ஆர். கவாய் பின்னணி
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்தவர் பி. ஆர். கவாய். 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்த கவாய், மும்பை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான வழக்குகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும் 2005 ஆம் ஆண்டும் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார். 2019 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்ற நீதிபதியானார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளின் பகுதியாக கவாய் இருந்துள்ளார். பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு வழங்கிய அமர்வில் இவரும் ஒருவர்.