இந்தியாவில் முதல் முறை: ஓடும் ரயிலில் ATM மெஷின்; அறிமுகம் செய்துள்ள மத்திய ரயில்வே
நாட்டில் இப்போது ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. பணத்தை நேரடியாகப் பயன்படுத்துவது குறைந்துவிட்டது. ஆனாலும் சில இடங்களில் ரொக்க பணத்தை மட்டுமே பயன்படுத்தவேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக ரயிலில் அல்லது பஸ்சில் பயணம் செய்யும்போது இணைய சேவை சரியாக இல்லாமல் இருந்தால் டிஜிட்டல் சேவையில் பாதிப்பு ஏற்படுவதுண்டு. எனவே பணம் எடுப்பதில் ஏ.டி.எம் மெஷின்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவரை ரயில் நிலையங்கள், முக்கியமான பொது இடங்களில் மட்டுமே ஏ.டி.எம் மெஷின்கள் இருந்தது. ஆனால் இப்போது முதல் முறையாக மும்பையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் ஏ.டி.எம்.சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து மன்மாட் வரை இயக்கப்படும் பஞ்ச்வாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த ஏ.டி.எம். அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படாத இடத்தில் இந்த ஏ.டி.எம். மெஷின் பொருத்தப்பட்டுள்ளது. ஏ.சி.கோச்சில் பொருத்தப்பட்டு இருந்தாலும் அனைத்து வகுப்புப் பயணிகளும் ஏ.டி.எம் சேவையை பயன்படுத்த முடியும். கண்காணிப்பு கேமரா மூலம் ஏ.டி.எம். கண்காணிக்கப்படுகிறது. இந்த ஏ.டி.எம் மெஷினை மகாராஷ்டிரா பேங்க் ரயில்வேயுடன் இணைந்து நிறுவி இருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை தெரியாத முதியவர்கள் மற்றும் சில பெண்களுக்கு இந்த ஏ.டி.எம். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏ.டி.எம் மெஷினிற்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற ரயில்களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.