`நிதி நிறுத்தம்' ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கும் ஹார்வார்டு பல்கலைக்கழகம்!
'தனக்கு எதிராக யாரும் பேசக்கூடாது' என்பது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்டிட்யூட்.
இவர் இஸ்ரேல் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் யாரும் குரல் கொடுக்கக்கூடாது என்று இவர் நினைக்கிறார்.
அதற்கேற்ற மாதிரி, அவர் பதவியேற்றதும், கல்வி நிலையங்களில் யாரும் அமெரிக்கா அரசுக்கு எதிராக எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
அப்படி ஈடுபடும் அமெரிக்க மாணவர்கள் கல்வி கற்பதில் இருந்து நிறுத்தப்படுவார்கள். பிற நாட்டு மாணவர்கள் அவர்களது நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
மேலும், எந்தக் கல்வி நிலையத்தின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ, அந்தக் கல்வி நிறுவனத்திற்கு அரசின் உதவித்தொகை நிறுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த வலையில் தற்போது அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகம் சிக்கியுள்ளது. இது உலகின் மிக பிரபலமான பல்கலைக்கழகம் ஆகும்.

ட்ரம்ப் பதிவு
சமீபத்தில், ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், "ஹார்வார்டு பல்கலைக்கழகம் தனது வரி இல்லா தகுதியை இழக்க வேண்டும். அது தொடர்ந்து அரசியல் கருத்துகள், தீவிரவாதம் போன்றவற்றை ஊக்குவித்து வந்தால் அந்தப் பல்கலைக்கழகத்தின் மீது அரசியல் நிறுவனங்கள் போல வரி விதிக்கப்பட வேண்டும்.
வரி விலக்கு என்பது மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே" என்று பதிவிட்டிருந்தார்.
அடுத்ததாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், ஆட்சேர்ப்பு, பணிசேர்ப்பு போன்ற நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று ட்ரம்ப் அரசு உத்தரவிட்டது.
ஹார்வார்டின் பதில்
இந்த அதிரடிக்கு ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் முதல்வர் ஆலன் கார்பர் தனது மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பதிலளித்தார்.
அதில், "ஹார்வார்டு பல்கலைக்கழகம் அரசின் எந்த நிபந்தனைக்கும் உடன்படாது.எக்காரணத்தை கொண்டு அது தனது சுதந்திரத்தையும், அரசியல் சாசன உரிமையையும் இழக்காது" என்று குறிப்பிட்டிருந்தார்.

நிதி நிறுத்தம்
இதனையடுத்து, ட்ரம்ப்பின் அரசு ஹார்வார்டு பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியத்தையும், 60 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தையும் நிறுத்தியுள்ளது.
இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹார்ட்வார்டு பல்கலைக்கழகத்தின் இந்த நிலைப்பாடு டாப் பல்கலைக்கழகங்களிடம் இருக்கும் தொல்லைக்கொடுக்கும் பண்பை காட்டுகிறது.
அவர்கள் அரசின் சட்டங்களை பின்பற்றாமல் அரசின் பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
சமீப காலங்களாக, அந்தப் பல்கலைக்கழகத்தில் நடக்கும் போராட்டங்கள் ஏற்றுகொள்ள முடியாதது. அவர்கள் யூத மாணவர்களுக்கு கொடுக்கும் தொல்லையை தாங்கி கொள்ள முடியாது.
அவர்களுக்கு அரசின் பணம் வேண்டுமென்றால், அரசு கூறும் மாற்றங்களை செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அரசு இவ்வளவு கூறியும், அந்தப் பல்கலைக்கழகம் செவிசாய்க்க துளியும் தயாராக இல்லை. அவர்கள் அவர்களது சுதந்தத்திரத்தை முதன்மையாக கருதி போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
