Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கெட்ட வாடை.. மருத்துவ சிகிச்சை தேவையா?
Doctor Vikatan: என்னால் சிறிய அளவிலான துர்நாற்றத்தைக்கூட சகித்துக்கொள்ள முடிவதில்லை. எப்போதும் என்னைச் சுற்றி ஏதேனும் நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். வீட்டினுள் ரூம் ஸ்பிரே, ஊதுவத்தி, சாம்பிராணி என ஏதோ ஒரு நறுமணம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இதனால் லேசான கெட்ட வாடை கூட என்னை அதிகபட்ச ஸட்ரெஸ்ஸுக்குள் தள்ளுகிறது. இது இ.என்.டி தொடர்பான பிரச்னையா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இ.என்.டி மருத்துவர் பி.நட்ராஜ்

துர்நாற்றத்தால் சங்கடம் ஏற்படுவது என்பது இயற்கையான ஓர் உணர்வுதான். உண்மையில் அது ஒருவித தற்காப்பு நடவடிக்கை (defence mechanism) என்றே சொல்லலாம். இந்த உணர்வின் மூலம் கெட்டுப்போன உணவு வகைகளைக் கண்டறிவது போன்ற பல பயன்கள் உண்டு.
சாதாரண மணம் அல்லது லேசான துர்நாற்றம்கூட சிலருக்கு அதிக சங்கடத்தை ஏற்படுத்தலாம். சில சமயம் சாதாரண உணவு வாசனைகூட குமட்டலை ஏற்படுத்திய அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும்.
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் மாற்றங்களால்கூட இது நிகழலாம். உதாரணத்துக்கு, கர்ப்ப காலத்தைச் சொல்லலாம். கர்ப்ப காலத்தில், சிலருக்கு பழகிய வாசனைகூட பிடிக்காமல் போவதையும், குமட்டல் உணர்வை ஏற்படுத்துவதையும் பார்க்கலாம்.
அதே போல சர்க்கரை நோய், ஊட்டச்சத்து குறைபாடு, சிலவகை நரம்பியல் நோய்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால், இவையெல்லாம் மிக அரிதானவையே.

கோவிட் நோய் தாக்குதலின் அறிகுறியாக வாசனை அறியும் திறன் இல்லாமல் போவது என்பதைப் பலரும் அறிந்திருப்பார்கள். வாசனை அறியும் திறன் இல்லாமல் போனதைப் போலவே இந்த அதிக வாசனை சென்சிட்டிவிட்டியும் சில பேருக்கு இருப்பதை மருத்துவர்கள் பார்த்தோம்.
இந்தப் பிரச்னை தற்காலிகமாக இருந்தால் அது தானாகவே நீங்கிவிடும் வாய்ப்பு அதிகம். ஒருவேளை நாள்பட இருந்தால் காது-மூக்கு-தொண்டை மருத்துவர் அல்லது நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.