தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!
`தெர்மாகோல், பிளாஸ்டிக் இல்லை..' மாற்றி யோசித்த பள்ளி; அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் உள்ள பள்ளி தான் பாரதியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, இந்த பள்ளியில் கடந்த மார்ச் 29 -ல் "manifest" என்கிற பெயரில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த அறிவியல் கண்காட்சியில் பிளாஸ்டிக், தெர்மோகோல் பயன்படுத்தாமல் மாணவர்கள் மாதிரி வடிவங்களை திறம்பட செய்துள்ளனர்.
மேலும், யூடியூப் பார்த்து செய்யாமல், தாங்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் உள்ளவற்றை மட்டுமே அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு மாணவரும் தங்களது புராஜக்ட்களை செய்துள்ளனர்.
1 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தையில் இருந்து 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தமிழ் கவிதை, ஆங்கில கிராமர், எளிய கணிதம், அறிவியல் படைப்புகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், தற்போதைய சூழ்நிலையியல், மாறுவேடம் என அனைத்து பாடத்திட்டத்தில் இருந்தும் மாணவர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தினர்.
வெறும் அட்டையிலேயே ஈபிள் டவர், பேப்பரில் ராக்கெட், அக்பர் அரண்மனை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாடல்கள் என நிறைய செய்து நம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் ஶ்ரீ வித்யா "manifest" கண்காட்சியை தொடங்கி வைத்து அனைத்து மாணவர்களின் models மற்றும் project விளக்கங்களையும் கேட்டார், இறுதியில் இந்த முயற்சி ஆரம்பித்தது பற்றி பாராட்டும் தெரிவித்தார்.
பள்ளி நிர்வாகி ஹேனா பிரேம்குமார் பேசுகையில், "தெர்மோ கோல் ஒரு வகையில் பிளாஸ்டிக் தான் என்பதை மறந்து விடுகிறோம், இதை எரிக்கும் போது நிறைய தீங்கு விளைவிக்கும் நச்சு பொருட்கள் வெளியாகும் இதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது தான் இதன் நோக்கம், இது தவிர நிறைய செலவு செய்து யூடியூப் எல்லாம் பார்த்து working models செய்து வருவது மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை, மாணவர்கள் தாங்கள் படித்ததில் கற்று கொண்டதை practical ஆக அவர்களே செய்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும், மாணவர்களின் யோசிப்பு திறன் மேம்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்றார்.
இந்த கண்காட்சியில் அறிவியல் மட்டுமில்லாமல் வரலாறு, ஆங்கிலம், தமிழ் என அனைத்து பாடத்திட்டத்தில் இருந்தும் மாணவர்கள் தங்களது மாடல்களை காட்சிபடுத்தியுள்ளனர். ஈபிள் டவர், ராக்கெட், கணினி, மழைநீர் சேமிப்பு, வயநாடு நிலச்சரிவு, அமில மழை, என சொல்லி கொண்டே போகலாம்.
இது தவிர நிறைய குழந்தைகள் மாறுவேடம் இட்டும் வந்து இருந்தனர். அவர்களின் பெற்றோர்கள், முன்னாள் பள்ளி மாணவர்கள் என நிறைய பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பள்ளியின் கல்வி ஆலோசகர் ஆல்பர்ட் பிரேம் குமார் அவர்களிடம் பேசினோம், "இந்த பூமியில் பிறந்த அனைத்து குழந்தைகளும் திறமைசாலிகள் தான், அதை வெளிப்படுத்துவது தான் இந்த கண்காட்சி. இதை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் நடத்தி வருகிறோம். வருடத்திற்கு ஒரு முறை நடத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஏற்கெனவே பசுமை விகடனில் எங்கள் பள்ளியில் பிளாஸ்டிக் மேனேஜ்மென்ட் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை கூட வெளிவந்துள்ளது.
எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்கள் அவர்களிடம் வீட்டில் பயன்படுத்தி பிளாஸ்டிக்களை ஒரு பையில் கொண்டு வந்து எங்களது வட்டத்திற்கு உட்பட்ட அரசு நெகிழி மறுசுழற்சி செய்யும் இடத்தில் வாரத்திற்கு ஒருமுறை கொடுத்து விடுவோம். அங்கு இந்த பிளாஸ்டிக் எல்லாம் துகளாக மாற்றப்பட்டு தார் ரோடு போடுவதில் கலவையாக பயன்படுத்தப்படுகிறது. இதை கடந்த பத்து ஆண்டுகளாக செய்து வருகிறோம்" என்றார்
இந்த கண்காட்சியில் பெற்றோர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
