PBKS vs KKR: "IPL-லில் எனக்குக் கிடைத்த சிறந்த வெற்றி" - நெகிழும் பஞ்சாப் கோச் பாண்டிங்
சண்டிகரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற கொல்கத்தா vs பஞ்சாப் போட்டி ஐபிஎல்லின் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாகப் பதிவாகியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பாஞ்சாப் அணியின் பவுலர்களே. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 8 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 62 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது.

ஆனால், பஞ்சாப் பவுலர்களின் அசாத்திய பந்துவீச்சில் நிலைகுலைந்த கொல்கத்தா, அடுத்த 33 ரன்களுக்கு மீதமிருந்த ஏழு விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் சாதனை வெற்றிபெற்றது. பஞ்சாப் தரப்பில் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்திய சஹால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
போட்டி முடிந்த பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், "இன்னும்கூட இதயத்துடிப்பு படபடப்பாகவே இருக்கிறது. எனக்கு 50 வயதாகிறது. இனிமேலும் இதுபோன்ற போட்டிகள் வேண்டாம். குறைந்த ரன்களை சேஸ் செய்வது சில சமயங்களில் கடினமாக இருக்கும் என்று ஆட்டத்தின் பாதியில் நாங்கள் கூறினோம். பிட்ச் இன்று அவ்வளவு ஈஸியாக இல்லை. சஹல் சிறப்பாகப் பந்துவீசினார். கடந்த போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துடன் இன்றைய போட்டிக்கு முன்பாக உடற்தகுதி சோதனையில் ஈடுபட்டார்.

நான் அவரை இழுத்து, எல்லாம் ஓகேவா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு, 100 சதவிகிதம் ஓகேதான், களத்தில் விடுங்கள் என்றார். என்ன ஒரு அருமையான பந்துவீச்சு. ஒருவேளை இந்தப் போட்டியில் நாங்கள் தோற்றிருந்தால், இரண்டாம் பாதியை நினைத்துப் பெருமைப்பட்டிருக்க முடியாது. எங்களின் பேட்டிங் மோசமாக இருந்தது. ஷாட் செலக்ஷன், அதைச் செயல்படுத்திய விதம் அனைத்தும் மோசமாக இருந்தது. ஆனால், களத்தில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினோம். இது போன்ற வெற்றிகள் எப்போதுமே இனிமையானவை. ஐ.பி.எல்லில் நிறைய போட்டிகளில் நான் பயிற்சியளித்திருக்கிறேன். அதில் எனக்குக் கிடைத்த சிறந்த வெற்றியாக இது இருக்கலாம்" என்று கூறினார்.