தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: கொல்கத்தா கேப்டன்
கேகேஆர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) கேப்டன் அஜிங்யா ரஹானே பஞ்சாப் அணியுடனான மோசமான தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 15.3 ஓவா்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாக அடுத்ததாக விளையாடிய கேகேஆர் 15.1 ஓவா்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தது.
மிகவும் குறைவான ரன்களை கட்டுப்படுத்தி பஞ்சாப் சாதனை படைக்க, நடப்பு சாம்பியனான கேகேஆர் மிக மோசமான பேட்டிங்கை செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
இந்த மோசமான தோல்வி குறித்து போட்டிக்கு பிறகான நேர்காணலில் கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பேசியதாவது:
தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்
விளக்கம் சொல்வதற்கு எதுவுமில்லை, என்ன நடந்ததென்று அனைவருமே பார்த்தோம். எங்களது முயற்சிகள் குறித்து வருத்தமாக இருக்கிறது. நான் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்.
விக்கெட் மிஸ் ஆனாலும் நான் தவறான ஷாட்டை ஆடி விட்டேன். ரகுவன்ஷி விக்கெட் நடுவரின் தீர்ப்பினால் ஆட்டமிழந்தார். அந்த நேரத்தில் நான் வாய்ப்பை எடுக்க விரும்பவில்லை. அது விவாதத்துக்கு உரியதுதான்.
நெட் ரன் ரேட் குறித்து பிரச்னையில்லை. அணியாக மோசமாக பேட்டிங் விளையாடினோம். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். தனி மனிதராக நீங்கள் நம்பிக்கையுடனும் நேர்மறையான சிந்தனையுடனும் இருக்க வேண்டும்.
மனதில் பல விஷயங்கள் ஓடின
இந்தப் போட்டியில் பேட்டின் முகப்பு பக்கத்தை முழுமையாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஸ்வீப் ஷாட் கடினமாக இருந்தது. அடிக்க வேண்டிய நோக்கத்துடன் கிரிக்கெட்டிங் ஷாட் ஆடியிருக்கலாம். அந்த நேரத்தில் பல விஷயங்கள் என் மனதுக்குள் ஓடின.
எங்களுக்கு இது எளிமையான சேஸ்தான். நான் மாடிக்குச் சென்றதும் என்னையே அமைதியாக்க வைத்திருந்து வீரர்களிடம் என்ன பேச வேண்டும் என்பதை சிந்திக்கிறேன்.
இப்போதும் நேர்மறையாகவே இருக்க விரும்புகிறேன். தொடரில் இன்னமும் பாதி போட்டிகள் இருக்கின்றன. இதை ஞாபகப்படுத்தி முன்னேற வேண்டும் என்றார்.