காதலிக்க மறுப்பு! மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு, கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்!
சேலம்: சேலத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர், தானும் கழுத்தை அறுத்துக் கொண்டார்.
சேலம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி சூர்யா (வயது 21). இவருக்கும் ஐடிஐ முடித்துவிட்டு வேலை தேடிவரும் வீரபாண்டியைச் சேர்ந்த மோகன பிரியன் (வயது 19) என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, சூர்யாவை காதலிப்பதாக மோகன பிரியன் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, இருவரும் நேரில் சந்தித்தபோது, மோகன பிரியனை பிடிக்கவில்லை என்று சூர்யா தெரிவித்துவிட்டார்.
இதனால், இருவருக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக சண்டை நடந்து வந்துள்ளது.
இதனிடையே, சில நாள்களில் கல்லூரி படிப்பை முடிக்கும் சூர்யாவுக்கும் அவரது உறவினருக்கும் திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்துள்ளனர்.
ஜூலை இரண்டாம் வாரத்தில் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இதனை அறிந்த மோகன பிரியன் ஆத்திரமடைந்துள்ளார்.
கல்லூரி செல்வதற்காக இன்று காலை சேலம் பழைய பேருந்து நிலையம் வந்த சூர்யாவுடன் மோகன பிரியன் சண்டை போட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சூர்யாவை மோகன பிரியன் குத்திவிட்டு தப்ப முயற்சித்துள்ளார்.
ஆனால், அருகிலிருந்தவர்கள் மோகன பிரியனை பிடிக்க முயற்சித்ததால், கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், மோகன பிரியன் மற்றும் சூர்யாவின் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.