``தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளை மறைக்கவே மாநில சுயாட்சி..'' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
நெல்லை போவதற்கு சென்னையிலிருந்து மதுரை வந்த நயினார் நாகேந்திரன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கருணாநிதி 1969-ல் உருவாக்கிய ராஜமன்னார் குழு பரிந்துரைகள் குறித்து கடிதம் எழுதியதற்கு அப்போது பிரதமர் இந்திராகாந்தி பதிலே கொடுக்கவில்லை. இன்றைக்கு மாநில சுயாட்சி தொடர்பாக உயர்நிலைக்குழு தேவையில்லை.

நீட், ஜிஎஸ்டி காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் மறைக்க மாநில சுயாட்சி என்று தங்கள் யோசனைகளை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார்கள்.
ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதை கட்டுப்படுத்த முடியாது. பொன்முடி விவகாரம் தொடர்பாக ஆளுநரை நான் சந்திக்கவில்லை. அது தவறான தகவல். தமிழகத்தில் எதுவுமே சரியாக நடக்கவில்லை. எல்லோரும் கஞ்சா குடிக்கிறார்கள், கிராமப்புறங்களில் இளைஞர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அந்தக்கடமையை செய்ய தவறி வருகிறது.

மதுரையில் கல்லூரி விழாவில் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் என்ன பேசினார் எனத் தெரியாது. தெரிந்து கொண்டு பேசுகிறேன்" என்றவரிடம்,
'அதிமுக-பாஜக கூட்டணி குறித்து நிர்வாகிகள் பேசாமல் தவிர்ப்பது, பொள்ளாச்சி ஜெயராமன் நடத்திய கூட்டத்தில் கட்சி நிர்வாகி கண்ணீர் வடித்துள்ளாரே' என்ற கேள்விக்கு,
"அதிமுகவில் கிளைச்செயலாளர் தொடங்கி அனைவரையும் எனக்கு நன்கு தெரியும். பொள்ளாச்சி ஜெயராமனிடம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். அதுபோன்ற செய்திகளை என்னால் நம்ப முடியவில்லை. நெல்லை பள்ளியில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
