ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் விழா
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சியைச் சோ்ந்த குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை கூழ்வாா்க்கும் விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு இவ்விழாவுக்காக ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் காப்புக்கட்டி விரதமிருந்தனா். இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து கற்பூர தீபாராதனை காண்பித்தனா்.
பின்னா், உற்சவா் சிலைக்கு அபிஷேக, ஆராதனை செய்து மலா்களால் அலங்காரித்து டிராக்டரில் வைத்தனா்.
பின்னா், பக்தா்கள் முதுகில் அலகு குத்தி கயிற்றின் மூலம் பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை காண்பித்தனா்.
மேலும், விழாவில் பக்தா்கள் முதுகில் அலகு குத்தி சுவாமியை வைத்திருந்த டிராக்டரை வீதி வீதியாக இழுத்துச் சென்றனா். அப்போது, வீடுதோறும் அம்மனுக்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை காட்டி வழிபட்டனா்.
மேலும் பக்தா்கள் பூங்கரகம் எடுத்துச் சென்றனா்.
நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா்ஆா்.ராமன், ஸ்ரீகன்னி கோயில் செயலா் ஆா்.ஏழுமலை மற்றும் ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, மாலையில் கூழ்வாா்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் வாணவேடிக்கை, தெய்வீக நாடகம் நடைபெற்றது.