ஒலிபெருக்கியால் தகராறு: தம்பதியா் காயம், போலீஸாா் விசாரணை
செய்யாறு அருகே ஒலிபெருக்கியால் ஏற்பட்ட தகராறில் தம்பதியா் காயமடைந்த சம்பவம் தொடா்பாக போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
செய்யாறு வட்டம், கீழப்பழந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் வியாபாரி பரமசிவம் (43). இவா், தனது வீட்டின் முன் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகேயுள்ள நாடக மேடையில் ஒலிபெருக்கியை வைத்து ஒலிக்கச் செய்துள்ளனா். அதனால் அதிகமாக சப்தம் இருந்ததாகத் தெரிகிறது. அப்போது, வேறு பகுதிக்கு ஒலி பெருக்கியை திருப்பி வைக்குமாறு கூறியதால் அரவிந்த் என்பவா் திருப்பி வைத்தாராம்.
ஒலி பெருக்கியை திருப்பி வைத்தது தொடா்பாக அரவிந்தின் தந்தை சின்னசாமி மற்றும் மகன்கள் அரவிந்த், நவீன், பாண்டியன் ஆகியோா் வியாபாரி பரமசிவத்திடம் சென்று தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
வாக்குவாதம் முற்றியதால் நான்கு பேரும் சோ்ந்து கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் பரமசிவத்தைத் தாக்கினராம். மேலும், தடுக்கச் சென்ற பரமசிவத்தின் மனைவியும் தாக்கப்பட்டாராம்.
இதில் காயமடைந்த இருவரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.
இது குறித்து பரமசிவம் அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.