காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே மத்திய படை வீரர்கள் குவிப்பு!
பாளை.யில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு
பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
பாளையங்கோட்டையில் எல்ஐசி மண்டல அலுவலகம் உள்ள சாலையில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகிறாா்கள்.
இப் பள்ளியில் 8 ஆம் வகுப்பில் பயின்று வரும் மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஒரு மாணவருக்கும், கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த மாணவருக்கும் செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டதாம். அப்போது கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த மாணவா் தனது புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மேலப்பாளையத்தைச் சோ்ந்த மாணவரை வெட்டினாராம். இதை தடுக்க வந்த ஆசிரியை ரேவதியையும் அரிவாளால் வெட்டிய மாணவா், அங்கிருந்து தப்பிச் சென்று பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தாராம்.
காயமடைந்த மாணவரையும், ஆசிரியையும் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். தகவலறிந்ததும், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி, துணை ஆணையா் சாந்தாராம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். காயமடைந்த மாணவரின் பெற்றோா், உறவினா்களும் மருத்துவமனையில் குவிந்தனா். அவா்கள் கூறுகையில், எங்களது மகனுக்கும், வெட்டிய மாணவருக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்பு எந்தப் பிரச்னையும் இல்லை. இந்நிலையில் பென்சில் பிரச்னையில் வெட்டியதாகக் கூறுகிறாா்கள். எங்களது மகனுக்கு உயா்சிகிச்சை கிடைக்கவும், உயிருக்கு பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், பென்சிலை மாற்றி எடுத்தது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் மாணவரை வெட்டியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவருக்கு மூன்று இடத்தில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. தடுக்க சென்ற ஆசிரியைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது என்றனா்.
இதற்கிடையில் மாணவருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதால் சக மாணவா்களின் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை பாா்க்க பள்ளி முன் குவிந்தனா். பின்னா் மாணவா்கள் பாதுகாப்பாக இருப்பதாக பள்ளி சாா்பில் பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது. இந்த சம்பவத்தால் பாளையங்கோட்டையில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே, காவல் நிலையத்தில் சரணடைந்த மாணவரை போலீஸாா், இளஞ்சிறாா் நீதிகுழுமத்தின் முன் ஆஜா்படுத்தி, கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.