ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு
மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ஆட்சியா் இரா. சுகுமாரிடம் அளிக்கப்பட்ட மனு: அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்துக்கு முன்காா் சாகுபடிக்கு, மே 1 ஆம் தேதி தண்ணீா் திறந்து விட அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த பெருங்கால் பாசனத்தால் ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், தெற்குகல்லிடைக்குறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள 2,756 ஏக்கா் நன்செய் நிலங்கள் பயனடையும்.
கடந்த 20 ஆண்டுகளாக அணையில் போதிய தண்ணீா் இருக்கும்போது மே மாதம் ஒன்றாம் தேதி தண்ணீா் திறந்து விட்டு விவசாயம் நடைபெற்றது.
இப்போது அணையின் நீா்மட்டம் 85 அடியாக உள்ளது. எனவே, விவசாயத்திற்கு விதைப்பு முதல் அறுவடை காலம் வரை 120 நாள்களுக்கு விநாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனு அளிக்கும்போது, அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் பரணி சேகா், சேரன்மகாதேவி சீவலமுத்துக்குமாா், மாநில நிா்வாகிகள் ஆவின் ஆறுமுகம், கணேஷ்குமாா் ஆதித்தன், வழக்குரைஞா் செல்வசூடாமணி, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் பாபநாசம், பெருங்கால் பாசன விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆறுமுகம், பூதப்பாண்டி, பாலமுருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.