ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்திய அரசு
நமது சிறப்பு நிருபர்
நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள்அளிக்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 52,507 இடங்கள் ரத்தாகி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளநிலையில், இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைந்துள்ளதாகவும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் மத்திய அரசை வலியுறுத்தினர்.
இந்நிலையில், தனியார் நிறுவனங்கள் தேவையான ஒப்பந்தங்களைப் பூர்த்தி செய்யத் தவறியதே
இடங்கள் குறைந்ததற்கு காரணம் என்றும் 10,000 யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது என்றும் மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதன் விவரம்: ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் 1,36,020 ஆக இருந்த ஹஜ் பயணிகளின் ஒதுக்கீடு, 2025 ஆண்டில் 1,75,025-ஆக அதிகரிக்கப்பட்டது.
விமானப் பயணம், மினா முகாம்கள், தங்குமிடம் மற்றும் கூடுதல் சேவைகள் உள்பட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சவூதி அரேபியா அரசு கூறிய விதிமுறைகளுக்கு ஏற்ப காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டு ஹஜ் கமிட்டிக்கு நிகழாண்டில் 1,22,518 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
மீதமுள்ள 52,507 இடங்கள் தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர் நிறுவனங்களுக்கு. சவூதி அரேபியா அரசு வழிகாட்டுதல்களில் மாற்றங்களை செய்தால், 800-க்கும் மேற்பட்ட தனியார் சுற்றுலா ஆபரேட்டர்கள் 26 ஒருங்கிணைந்த ஹஜ் பயண ஏற்பாட்டு நிறுவனங்களாக (சிஹெச்ஜிஓ) ஒருங்கிணைக்கப்பட்டன.
சவூதி அரேபியாவால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மினா முகாம்கள், தங்குமிடம், யாத்ரிகர்களின் போக்குவரத்து ஆகியவை தொடர்புடைய கட்டாய ஒப்பந்தங்களை சிஹெச்ஜிஓக்கள் பூர்த்தி செய்யத் தவறிவிட்டன.
இருப்பினும், இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர்கள் நிலையில் சம்பந்தப்பட்ட சவூதி அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. மினாவில் கடுமையான கோடை வெப்ப சூழ்நிலையில் யாத்ரிகர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை இந்தியாவோடு சவூதி பகிர்ந்து கொண்டது.
இந்நிலையில், மத்திய அரசின் தலையீட்டின் காரணமாக, மினாவில் தற்போது கிடைக்கும் இடத்தின் அடிப்படையில் 10,000 யாத்ரீகர்களுக்கு அனுமதி அளிப்பதாக சவூதி ஹஜ் அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.
இது தொடர்பான விண்ணப்பப் பணிகளை முடிக்க ஹஜ் இணையதளத்தை மீண்டும் திறக்கவும் சவூதி ஹஜ் அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்தப் பணிகளை விரைவாக மேற்கொள்ள சிஹெச்ஜிஓ- களுக்கு மத்திய அரசு கேட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.