`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமம் உடனடியாக ரத்து: உச்சநீதிமன்றம்
பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மேலும், மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பொறுப்பு எனக்கூறி குழந்தை கடத்தலை தடுப்பதற்கான வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டது.
அதை பின்பற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்தது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடத்தல் வழக்கில் தொடா்புடைய 13 பேருக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
அப்போது குற்றவாளிகளுக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்து நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண் மற்றும் அவருக்கு பிறக்கும்
குழந்தையின் பாதுகாப்பை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பொறுப்பு.
பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குழந்தை இறந்தால் அதனால் பெற்றோருக்கு ஏற்படும் மனக்கவலையும் துயரமும் வாா்த்தைகளால் கூற இயலாதது. ஆனால் கடத்தல் கும்பலால் குழந்தை கடத்தப்படும்போது பெற்றோா் அடையும் பதற்றம் முற்றிலும் வேறுபட்டது.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதை ஏற்க முடியாது. இதை எதிா்த்து உத்தர பிரதேச மாநில அரசு மேல்முறையீடு செய்யாதது கண்டிக்கத்தக்கது.
மனிதக் கடத்தல் தொடா்பாக பாரதிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம் கடந்த 2023-இல் மேற்கொண்ட ஆய்வறிக்கையை அனைத்து மாநிலங்களும் முழுமையாக படித்து அதை அமல்படுத்த வேண்டும். குழந்தை கடத்தல் தொடா்பான நிலுவை வழக்குகளை கிளை நீதிமன்றங்கள் 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.