Health: தெரிந்த சோளம்; தெரியாத தகவல்கள்... சொல்கிறார் உணவியல் நிபுணர்!
சோளம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? கடற்கரைக்குச் சென்றாலே நம் கண்கள் முதலில் தேடுவது சோளக்கடைகளைத்தான். புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் என இதில் இல்லாத சத்துக்களே இல்லை. அத்தகைய சோளத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான ஆரோக்கிய தகவல்களை சொல்கிறார் உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜ்.

பொதுவாக 100 கிராம் சோளத்தில் 73 கலோரி எனர்ஜி நமது உடலுக்கு கிடைக்கிறது. தவிர, 2.7 கிராம் புரதச்சத்து,12 கிராம் மாவுச்சத்து, 6 கிராம் நார்ச்சத்து, சிறிய அளவில் கொழுப்புச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் என பல வகையான சத்துக்கள் சோளத்தில் நிரம்பி வழிகின்றன. ஓர் இட்லிக்கு பதிலாக 100 கிராம் சோளத்தினை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பதப்படுத்தாமல் இயற்கையாக வளரும் சோளம் உடலுக்கு மிகுந்த நன்மைகளை தருகிறது. அதிலும் குறிப்பாக பேபி கார்ன் உடலுக்கு மிகவும் நல்லது. நாட்டுச்சோளம் அல்லது வெள்ளைச்சோளம் என்று அழைக்கப்படும் சிறு சோளம் உடலுக்கு ஏராளமான சத்துக்களைத் தருகிறது. ஆனால், இவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும். அதன் விளைவாக, இதயம் சார்ந்த நோய்கள் வரலாம். தவிர, பதப்படுத்தப்பட்ட சோளத்தையும் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் சோளம் தொடர்பான ஸ்நாக்ஸையும் தவிர்ப்பது நன்று. ஏனென்றால், பதப்படுத்தப்பட்ட சோளத்தில் அதிக அளவு சோடியம் இருப்பதால் அது உடலுக்கு தீங்கையே விளைவிக்கும்.

சோளத்தில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைவதற்கு மிகவும் உதவுகிறது. அளவாக சாப்பிட்டால் இதய நோய் வராமல் பாதுகாத்தல், ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றிற்கு உதவுகிறது. மேலும் இதிலிருக்கிற லியூசின் என்ற வேதிப்பொருள் வயது சார்ந்த பிரச்னைகள் வராமல் தடுப்பதற்கும், கண்களின் நன்மைக்கும் உதவுகிறது.
இவற்றில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படுவதால் சோளத்தினை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உட்கொள்ளலாம். ஒரு முழு சோளம் 75 கிராம் இருக்கும். ஒரு மனிதன் ஒரு முழு சோளத்தை தனது உணவில் ஒரு பகுதியாக தினந்தோறும் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இவற்றில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், வெள்ளை சோளம் எடுத்துக்கொள்ளும்போது மட்டும் சிறிது கவனம் தேவை.
உணவு குழாய் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள், நார்ச்சத்து உடலுக்கு சேராதவர்கள், இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் உடையவர்கள் சோளத்தைத் தவிர்ப்பது நன்று.

பொதுவாகவே சோளத்தினை சாலட் வடிவில் எடுத்துக் கொள்வது நல்லது. சோளத்துடன் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கேரட், சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து உண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. வயதானவர்களுக்கு சூப் வடிவில் கொடுக்கலாம்.