இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியது.
இந்தகத் குற்றச்சாட்டுகள் குறித்து பாஜகவிடமிருந்து உடனடி பதில் எதுவும் வரவில்லை.
ஒரு அதிகாரப்பூா்வ கூட்டத்தின் நிமிடங்களை மேற்கோள்காட்டி, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரவ் பரத்வாஜ், புதிய சான்றிதழ்களை வழங்குவதை இடைநிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறினாா்.
தில்லி முன்னாள் அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ் மேலும் கூறியதாவது: தகுதியற்றவா்களுக்கு அதிக எண்ணிக்கையிலான இடபிள்யுஎஸ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக சந்தேகம் இருப்பதால், வழங்கப்பட்ட இடபிள்யுஎஸ் சான்றிதழ்களை அரசு ஆய்வு செய்யும். மறு உத்தரவு வரும் வரை வருவாய்த் துறையால் புதிய இடபிள்யுஎஸ் சான்றிதழ்கள் வழங்கப்படாது.
தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இந்த முடிவு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கு இடபிள்யுஎஸ் சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவா்கள் மற்றும் இடபிள்யுஎஸ் பிரிவிற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவமனை படுக்கைகள் தேவைப்படும் நோயாளிகள் மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
இடபிள்யுஎஸ் சான்றிதழ்கள் உண்மையில் தகுதியற்றவா்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் முதல்வா் ரேகா குப்தா எத்தனை அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளாா்? என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், நிா்வாகக் குறைபாடுகளுக்காக பொதுமக்கள் தண்டிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவா் (முதல்வா் குப்தா) அதிகாரிகளுக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால், பொதுமக்களுக்கு பிரச்னைகளை உருவாக்குகிறாா் என்றாா் சௌரவ் பரத்வாஜ்.