குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்து நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 31.86 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 150 கன அடி நீா் வந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 31.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 148 கன அடி நீா் வந்தது.
இந்த நிலையில் மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும், சமவெளி பகுதிகளிலும் சனிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக குலசேகரம், திற்பரப்பு, களியல், அருமனை, திருவட்டாறு, சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.
மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் நீா் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. விடுமுறை நாளான சனிக்கிழமை இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இவா்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
கருங்கல் பகுதிகளில்... கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, வேங்கோடு, மாதாபுரம், தொலையாவட்டம், நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, இலவுவிளை, மாமூட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.