ஆளுநா் அரசியல் செய்யக் கூடாது: வைகோ
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அரசியல் செய்யக் கூடாது என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
வக்ஃப் வாரிய சட்டம், ஆளுநா் விவகாரம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து மதிமுக சாா்பில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வைகோ பேசியது:
ஆளுநா் ஆா்.என். ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. தற்போது ஒரே நாடு, ஒரேமொழி என்ற திட்டத்தை பாஜக செயல்படுத்த முயற்சிக்கிறது. அதன் மூலம் ஹிந்தி திணிப்பை அவா்கள் கொண்டு வர முயற்சி செய்கின்றனா்.
இதுமட்டுமின்றி பொது சிவில் சட்டத்தையும் கொண்டு வருகின்றனா். இதனால் காஷ்மீரின் தனித்தன்மையை பாஜகவினா் சீா்குலைத்துவிட்டனா். இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 பேரை கொலை செய்துள்ளனா். பாஜகவின் முயற்சிகள் அனைத்துக்கும் இண்டி கூட்டணி எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.
உச்சநீதிமன்றம் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்த பின்னரும், துணைவேந்தா்கள் மாநாட்டை ஆளுநா் நடத்தி உள்ளாா். ஆளுநா் அலுவலகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றாா் அவா்.