பட்டுக்கோட்டை: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி - தொழிலதிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு
பட்டுக்கோட்டை அருகே உள்ள வீரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அருள் சூசை(55). திருமணம் ஆனவர். தொழில் அதிபரான இவர் துபாய் நாட்டில் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இவருக்கு சொந்தமாக கோடி கணக்கில் சொத்துக்கள் உள்ளதாக சொல்கிறார்கள். இந்த நிலையில், 17 வயது சிறுமியை அருள் சூசை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதில் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்திருப்பதாகவும், இதை மறைக்க பல முயற்சி மேற்கொள்ளப்பட்டடாகவும் கடந்த ஒரு வாரமாக பட்டுக்கோட்டை பகுதியில் பேசப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அருள் சூசை மீது பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது. இது குறித்து விசாரித்தோம், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அரசு பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளி செல்வதை நிறுத்தி விட்டார். அம்மா இறந்து விட்டார். அப்பா குடிநோய்க்கு ஆளானவர். அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தவர். இதை தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்ட அருள் சூசை சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பழகி நடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக விசாரணை செய்யவில்லை என சொல்லப்படுகிறது. இதில் கர்ப்பமான அந்த சிறுமிக்கு இரண்டு வராங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை மறைப்பதற்கு அருள் சூசை தரப்பு பல வகையில் மெனக்கெட்டது.

ஆனாலும் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக தஞ்ச சரக டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி ஆகியோருக்கு கவனத்துக்கு சென்ற நிலையில் இதை உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. சிறுமிக்கு தற்போது 18 வயது ஆகிறது ஆனால் 18 வயதை நிறைவு செய்யவில்லை. 17 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் நேற்று அருள் சுசை மீது போக்சோ பிரிவில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்பு, பெண் ஒருவர் அருள் சூசை தப்பாக நடந்து கொண்டதாக புகார் அளித்த நிலையில் அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அருள் சூசை தற்போது தலைமறைவாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இது குறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கன்னிகாவிடம் பேசினோம், ``அருள் சூசை மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.