ஹரியாணா: நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது வாகனம் மோதல்: 7 பேர் பலி
தென்காசி: சொத்துவரி ரசீது கொடுக்க ரூ.15000 லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது!
சொத்துவரி போட்டுத் தருவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடுகப்பட்டி, தெற்குசத்திரத்தை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 36). இவர், புளியங்குடியில் நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டியுள்ளார்.

காளிராஜன் புதிய வீட்டுக்கு சொத்துவரி கட்டுவதற்கு புளியங்குடி நகராட்சிக்குச் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமரை சந்தித்து, தனது வீட்டுக்கு சொத்துவரி ரசீது போட்டுத்தரும்படி கேட்டுள்ளார். இந்தநிலையில் சொத்துவரி போட்டுத் தருவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என அகமது உமர் கூறியுள்ளார்.
ஆனால் லஞ்சம் தர விருப்பமில்லாத காளிராஜன், இதுகுறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், அகமது உமரை கையும் களவுமாக கைது செய்ய முடிவு செய்தனர்.
ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அகமது உமரிடம் லஞ்சமாக கொடுக்கும்படி காளிராஜனுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

அதன்படி, சொத்துவரி ரசீது கேட்டு மீண்டும் புளியங்குடி நகராட்சிக்கு வந்த காளிராஜன், வருவாய் உதவியாளர் அகமது உமரை சந்தித்து அவர் கேட்டபடி ரூ.15ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை அகமது உமர் பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
