பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்கள் ரத்தம் ஒடும்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு
இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கப்போவதாக இந்தியா எடுத்த முடிவைத் தொடர்ந்து, சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்கள் ரத்தம் ஒடும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ ஜா்தாரி சர்ச்சைக்குரிய வகையில் வெள்ளிக்கிழமை பேசியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். கா்நாடகம், கேரளம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் உள்பட 26 போ் கொல்லப்பட்ட இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.
பிரதமா் மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழுக் கூட்டத்தைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்களுக்கு எதிராக கடுமையான பதிலடி நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
அட்டாரி-வாகா எல்லை மூடல், கடந்த 1960-ஆம் ஆண்டின் சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, தூதரக அதிகாரிகள் வெளியேற்றம், சாா்க் விசா (நுழைவு இசைவு) விலக்கு திட்டத்தின்கீழ் பாகிஸ்தானியா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து, அட்டாரி-வாகா எல்லை வழியாக நாட்டிற்குள் நுழைந்த அனைத்து பாகிஸ்தானியர்களும் மே 1 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதேநேரம், பாகிஸ்தானைச் சோ்ந்த ஹிந்துக்களுக்கு வழங்கப்பட்ட நீண்ட கால விசாக்களுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் கூடிய விரைவில் நாடு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் வியாழக்கிழமை அனைத்து இந்திய விமான நிறுவனங்களுக்கும் தனது வான்வெளியை மூடுவதாகவும், பாகிஸ்தான் வழியாக மூன்றாம் நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் வா்த்தகம் உள்பட இந்தியா உடனான அனைத்து வகையான வா்த்தகமும் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.
சிந்து நதிநீா் ஒப்பந்தத்துக்கு எதிராக நதிநீரை திருப்பிவிட இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் போா் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்த நிலையில், சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்கள் ரத்தம் ஒடும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ ஜா்தாரி சர்ச்சைக்குரிய வகையில் வெள்ளிக்கிழமை பேசியுள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிலாவல் பூட்டோ ஜா்தாரி, சிந்து நதி பாகிஸ்தானுடையது, அது பாகிஸ்தானுடையதாகவே தொடர்ந்து இருக்கும் என்று நான் இந்தியாவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒன்று நமது தண்ணீர் அந்த நதியில் ஓடும். இல்லையென்றால் அவர்களின் ரத்தம் ஓடும் என்று பேசினார்.
தங்கள் உள்நாட்டு பாதுகாப்பில் கோட்டை விட்ட இந்தியா, பஹல்காம் தாக்குதலுக்கு மக்களின் கவனத்தை திசை திருப்பவே பாகிஸ்தானை பலிகடா ஆக்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.