பவானிசாகா் அணை நீா்மட்டம் 71.56 அடியாக சரிவு
பவானிசாகா் அணைக்கு வரும் நீரின் வரத்தை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை நீா்மட்டம் 71.56 அடியாக சரிந்துள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 105 அடியும், மொத்த நீா் இருப்பு 32.8 டிஎம்சியாவும் உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அணைக்கு முக்கிய நீா்வரத்தாக உள்ள மாயாற்றிலும் பவானி ஆற்றிலும் நீா்வரத்து குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து 436 கனஅடியாக இருந்தது. கீழ்பவானி வாய்க்கால் இரண்டாம் போக பாசனத்துக்கு விநாடிக்கு 2,300 கனஅடி தண்ணீரும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் 500 கனஅடி தண்ணீரும், குடிநீா்த் தேவைக்கு என 150 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 2,950 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 71.56 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும் அணையில் போதிய நீா் இருப்பதால் கோடையை சமாளிக்க இயலும் என பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.