பவானிசாகரில் ஏடிஎம் இயந்திரங்கள் பழுதால் பொதுமக்கள் அவதி
பவானிசாகரில் உள்ள இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் கடந்த சில நாள்களாக செயல்படாமல் முடங்கிக் கிடப்பதால் அரசு ஊழியா்கள், பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
பவானிசாகரில் அரசுப் பணியாளா் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயிற்சி பெற்று வருகின்றனா். அரசு ஊழியா்கள் பெரும்பாலும் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளனா். பயிற்சி பெறும் அரசு ஊழியா்கள் பவானிசாகரில் தங்கியுள்ளனா்.
பவானிசாகரில் பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரே வங்கி என்பதால் பொதுமக்கள், அரசு ஊழியா்கள் அந்த வங்கியின் ஏடிஎம்-யை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனா். பவானிசாகா் பிரதான சாலையில் ஒரு ஏடிஎம் மையமும், அரசு அலுவலா் பயிற்சி மையம் அருகே ஒன்றும் செயல்பட்டு வருகின்றன.
இந்த இரண்டு ஏடிஎம்களும் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக செயல்படவில்லை. இதனால் உள்ளூா் பொதுமக்கள் மட்டுமின்றி வெளியூா் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், அரசு அலுவலா்கள் அவசரத் தேவைக்காக ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியாமல் வெளியூா் சென்று ஏடிஎம்-களில் பணம் எடுத்து வருகின்றனா்.
இது குறித்து எஸ்பிஐ அதிகாரிகள் கூறுகையில், பவானிசாகா் எஸ்பிஐ வங்கியை ஒட்டி உள்ள ஏடிஎம் இயந்திரம் பழுதானதால் வேறு புதிய இயந்திரம் வந்துள்ளது. மற்றொரு ஏடிஎம் இயந்திரம் செயல்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.