மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
`பாட்ஷா பார்த்துட்டு ரஜினி போலவே ஆட்டோ ஓட்டினேன்!' - டூப் ஆர்டிஸ்ட் ரஜினி சோமுவின் கதை! |Human Story
"வணக்கம் பிரதர். எப்படி இருக்கீங்க" என வாஞ்சையோடு வரவேற்றுப் பேசத் தொடங்கினார் ரஜினி சோமு. திண்டுக்கல்லைச் சேர்ந்த டூப் கலைஞரான சோமு பல ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் போல் வேடமிட்டு மேடைகளில் நடித்து வருகிறார்.
ரஜினி வேடத்தில் உலகையே சுற்றி வந்துள்ள இவர், ரஜினிகாந்தின் டூப் ஆர்டிஸ்ட்களில் கவனிக்கத்தக்கவர். தற்போது மேடை நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் கவனம் பெற்று வருகிறார்.

உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர் நம்மைக் கண்டதும் பேசத் தொடங்கினார், "ரஜினி சாருக்கு ஸ்கேல் பாடின்னு சொல்லுவாங்க. ஸ்கேல் நேரா நிக்குற மாதிரி பாடி.
அவரை மாதிரி நாம பண்றோம், அதனால உணவு கட்டுப்பாட்டுல இருக்கணும். உடம்பு, முடி எல்லாமே பராமரிக்கணும். இது எல்லாம் சரியா இல்லைன்னா அவரை மாதிரி பண்றது அசிங்கமா இருக்கும்," என்றவர் பிறகு அருணாச்சலம் திரைப்படத்தில் வரும் ரஜினிகாந்தின் ஒப்பனை செய்து கொண்டே நம்முடன் உரையாடினார்.
"முன்னாடி எல்லாம் விக் வைக்காம இருந்தேன். முடி கொட்ட ஆரம்பிச்ச அப்புறம் தான் விக் வைக்க ஆரம்பிச்சேன். நம்ம ஊர் விக் எல்லாம் ஆறாயிரம், ஏழாயிரம் ரூபாய்க்கு வரும். நான் இம்போர்ட்டட் விக் வாங்கினேன், அது இருபத்தி அஞ்சு முதல் நாற்பதாயிரம் வரைக்கும் வரும். இப்போ 80ஸ் விக் ஒன்னு ஆர்டர் கொடுத்திருக்கேன், நாம நினைச்ச மாதிரி வரணும், அதான்," என்றார்.
பின்பு தான் ரஜினி வேடமேற்க ஆரம்பித்த கதை குறித்து பகிர ஆரம்பித்தார். "எனக்கு நடனம் மேல ஆர்வம் அதிகம், நிறைய நடன நிகழ்ச்சிகளுக்கு போய் பார்ப்பேன்.
திண்டுக்கல்ல ஐயன்குளம்னு ஒரு ஏரியா, அங்க நடனம் ஆடுறவங்க ஒரு நாலஞ்சு பேர் இருந்தாங்க. அவங்க கூட சேர்ந்து நிறைய ஊருக்கு போய் ஆட ஆரம்பிச்சேன், அப்போ இந்த வேஷம் எல்லாம் இல்லை.
இங்க தமிழன் ஸ்டுடியோன்னு ஒரு போட்டோ ஸ்டுடியோ, அங்க இருக்கிற புகைப்படக்காரர் என்னை ஒரு போட்டோ எடுத்தார். அருணாச்சலம் படத்துல ரஜினி சார் கைய மேல தூக்கி வணக்கம் வைப்பார்.

என்னை அதே போஸ்ல புகைப்படம் எடுத்த போது தான் 'ஓ, நமக்கும் ரஜினி சாருக்கும் முகம் ஒரே மாதிரி இருக்கு'னு நான் நம்ப ஆரம்பிச்சேன்.
அதுக்கு முன்னாடி எனக்கு அப்படி தோணலை. அந்த ஒரு ஸ்டில் தான் என்னை நிறைய இடத்துக்கு கொண்டு போய் சேர்த்துச்சு. 2004-ல பிரிட்டானியா 50:50 பிஸ்கட்டின் விளம்பரத்துல நடிச்சேன். அதுவும் எனக்கு நல்ல ரீச் தந்தது," என்றவர் பேசிக் கொண்டிருக்கையிலேயே அருணாச்சலம் திரைப்படத்தின் ரஜினிகாந்த் தோற்றத்துக்கு மாறி, அதே அருணாச்சலம் போஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.
பின்பு அடுத்த தோற்றத்துக்கு தயாராகிக் கொண்டே, "தர்மதுரை படத்தில் 'அண்ணன் என்ன தம்பி என்ன'னு ஒரு பாட்டு வரும், அந்தப் பாட்டுக்கு மேடையில் நடிச்சேன். நான் தான் முதல் முறையா அந்த பாட்டுக்கு மேடையில் நடிச்சேன்.
அந்தப் பாட்டுக்கு ஃபீல் பண்ணி நடிக்கும் போது கண்ணுல தண்ணி வந்துடும். தர்மதுரை நான் பண்ணதைப் பார்த்து நிறைய ரஜினிகாந்த் வேடமிடுறவங்க பண்ண ஆரம்பிச்சாங்க. 'சரி, எல்லாரும் பண்றாங்க, அடுத்து ஒண்ணு புதுசா இறக்குவோம்'னு தான் மனிதன் பண்ணேன்.
எல்லோரும் கண்ணாடி போட்டு நடிச்சாங்க, நான் கண்ணாடி இல்லாம நடிச்சேன்.

ஏன்னா, கண்ணாடி போடாம பண்ணும் போது சின்ன சின்ன உணர்ச்சிகளையும் காட்ட முடியும்னு நான் நினைக்கிறேன்.
அவர் கண்ணிலேயே நிறைய நடிப்பார், அது எல்லாம் செய்ய ஆரம்பிச்சேன். ரஜினி பாட்டுல ஒரு வித்தியாசம் கொடுக்கணும்னு தான் மனிதன் பாட்டு, உள்ளுக்குள்ள சக்ரவர்த்தி, அத்திந்தோம் எல்லாம் பண்ணேன்.
80ஸ் காலகட்ட ரஜினியை நம்மால பண்ண முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால பண்ணாம இருந்தேன்.
டிக்-டாக் வந்ததுக்கு அப்புறம் ரீல்ஸ் பண்ணலாம்னு, ஆகாய கங்கை பாட்டுக்கு கெட்அப் போட்டு பண்ணேன். முடியை சைடு எடுத்து சீவுனேன், பெல் பாட்டம் பேன்ட் ஒன்னு தைச்சு, ஒரு வெள்ளை சட்டை போட்டு, நம்ம திண்டுக்கல் ஆர்.எம்.காலனில ஒரு பார்க் இருக்கு, அங்க போய் ரீல்ஸ் எடுத்தோம்.
அந்த வீடியோ பயங்கர வைரல். ஒரு நாளைக்கு 60 அழைப்பு வரும் எனக்கு, அந்த அளவுக்கு அதுக்கு வரவேற்பு கிடைச்சது. உலகம் முழுக்க அந்த வீடியோ போச்சு, டிக்-டாக்ல எனக்கு 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் கிடைச்சாங்க.

உலகம் முழுக்க இருக்கும் ரஜினி ரசிகர்கள் கிட்ட என்னை அந்த ரீல்ஸ் கொண்டு போய் சேர்த்தது. அந்த ரீலை ஒரு ரஜினி ரசிகர் ரீமிக்ஸ் பண்ணி, தன் குடும்பத்தோட அமர்ந்து, தன் கையில சூடத்தைக் கொளுத்தி சுத்திக் காட்டினார்.
எனக்கு ரொம்ப ஃபீலிங் ஆயிடுச்சு. இது எல்லாம் எனக்கு கிடைச்ச மரியாதை கிடையாது, ரஜினிகாந்த் எனும் மனிதருக்கும் அவருடைய பிம்பத்துக்கும் கிடைச்ச மரியாதை.
எங்க அப்பா ஒரு கர்நாடக இசை ஆசிரியர். நான் பாடகராகத் தான் ஆகியிருக்கணும். என்னை சங்கீதம் படிக்கச் சொல்லி அவ்வளவு தூரம் சொன்னாங்க.
ஆனா எனக்கு அப்போ அதுல ஆர்வம் இல்லை, விட்டுட்டேன். இப்போ வருத்தப்பட்டேன், 'என்னடா, பாடகராக வேண்டிய ஆள் இப்படி ஆயிட்டோமே'னு. பரவாயில்லை, இந்தத் துறைக்கு போனதுக்கு வீட்ல யாரும் தடுக்கலை, நம்மளும் வீட்டுக்கு அடங்காத பிள்ளை என்பதால அவங்களும் நம்ம போக்குல விட்டுட்டாங்க.
எட்டாவதோட ஸ்கூல் படிப்பை நிறுத்திட்டேன். அப்படியே நம்ம வாழ்க்கை போயிடுச்சு.

பொண்ணு பார்க்கப் போகும் போது தான் 'இவன் என்ன வேலை பார்க்கிறான்' அப்படின்னு பேச்சு வந்தது. நான் எலெக்ட்ரிஷியன் வேலை பார்த்தேன்.
கிரைண்டர் அசெம்பிள் பண்ணுவேன், வேலை செய்யலைன்னா சர்வீஸ் பண்ணுவேன். இந்த வேலைகள் பாதி, நிகழ்ச்சிகள் பாதின்னு போய்ட்டு இருந்தது. நாள்கள் ஆக ஆக இதுவே முழுசாயிடுச்சு.
இடையில பட வாய்ப்புகள் வந்தது. ஒரு படம் நானே ஹீரோவா நடிக்கத் தயார் பண்ணாங்க, கொரோனா வந்து அது நடக்கலை. இல்லைன்னா நான் ஹீரோவா நடிச்சு படம் வெளிவந்திருக்கும்," என்று சற்று வருத்தத்துடன் கூறினார்.
அவரிடம் பாதியில் நிறுத்திய பெண் பார்க்கச் சென்ற நிகழ்வு குறித்து கேட்டோம். "இந்தத் துறையில நிறைய பெண்கள் என்னைக் காதலிச்சாங்க, நிறைய பேருக்கு என்னைப் பிடிச்சிருந்தது, அதெல்லாம் ஒண்ணொண்ணா கடந்தாச்சு.
'விட்டா இவன் யாரையாச்சும் கூட்டிட்டு வந்துடுவான்' அப்படின்னு வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க.
வேறொரு பேட்டியில பேசும் போது, 'என் கணவர் ரஜினி மாதிரி இருக்கறதுனால தான் எனக்கு பிடிச்சது'னு என் மனைவி சொன்னாங்க," என்றார். பின்பு, "கொரோனா காலத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அப்ப தான் சிரமப்பட்டேன்.
படம் பண்ணப் போறேன்னு சொன்னேன்ல, அவர் வேலூர்ல இருக்காரு. அவரு எனக்கு ரெண்டு வருஷம், மாசம் மாசம் பத்தாயிரம் ரூபாய் தந்தார். அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவரும் நானும் கண்டிப்பா படம் பண்ணுவோம்.

தற்போது பாட்ஷா கெட்அப்பில் உருமாறியவர், தனக்குத் தெரிந்த ரஜினி ரசிகர் ஒருவரின் ஆட்டோவை எடுத்து வந்து பேசினார்.
"பாட்ஷா படம் ரிலீஸ் ஆன சமயம் தலைவர் ஆட்டோ ஓட்டுறாரு, நாமளும் ஆட்டோ ஓட்டுவோம்னு ஒரு நாலு வருஷம் ஆட்டோ ஓட்டினேன். அப்போ ஓட்டும் போதும் இதே தலைவர் கெட்அப்ல தான் ஓட்டினேன்.
என்னைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் ஒரு கடவுள். அவரை எப்போ சந்திக்கணும்னு ஒரு டைம் இருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு கூட்டத்தோடு கூட்டமா அவரைப் பார்த்து போட்டோ எடுத்துட்டு வர விருப்பமில்லை.
அவரைப் பாக்கணும், அவர்கிட்ட பேசணும். கிட்டத்தட்ட என் வாழ்க்கையில 40 வருஷம் ரஜினிக்காக அர்ப்பணிச்சிருக்கேன். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அதுல எனக்கு வருமானமும் வருது.
ஒரு கலைஞனா நான் மாறினதுக்கு சூப்பர்ஸ்டார் தான் காரணம். 36 மாவட்டம், 234 தொகுதி, இந்தியா முழுக்க மட்டுமில்லாம வெளிநாடு வரைக்கும் எல்லாப் பக்கமும் போயிருக்கேன்.
இங்க எல்லாம் சோமுன்னு என்னை யாரும் கூப்பிடலை, ரஜினி சோமுன்னு தான் கூப்பிடுறாங்க.
முன்னாடி எதுவும் தெரியலை, திருமணத்துக்கு பின்பு தான் இதுல வரும் வருமானம் கம்மியா தோணுச்சு. திறமையை வளர்த்து ரஜினி மாதிரி சிறப்பா நடிக்க நடிக்க, என்னோட வருமானம் ஏறிட்டே போச்சு.

இப்போ நான் பத்தாயிரம் ரூபாய்க்கு கம்மியா பண்றது இல்லை. அதிகபட்சமா ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் வாங்கியிருக்கேன்.
அதனால குடும்பத்தை நடத்துறதுல எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை," என்றவர், "இரண்டு மூணு முறை ரஜினி சாருக்கு டூப் போட கூப்பிட்டாங்க, அப்புறம் அவரே நடிச்சுட்டார்," என்றார். தற்போது ஜெயிலர் கெட்அப்பில் "ஜெயிலர் படத்துக்கு கூப்பிட்டாங்க, போட்டோ எல்லாம் எடுத்துட்டு 'கூப்பிடறோம்'னு சொன்னாங்க.
அப்புறம் லால் சலாம் படத்துக்கு கேட்டாங்க, அப்புறம் அதுல அவரே வந்து ரீ-ஷூட் பண்ணிட்டு போயிட்டார். இப்போ ஜெயிலர்-2-ல கேட்டிருக்காங்க," என்றார். ஜெயிலர் கெட்அப்பில் தயாராகியும் விட்டார்.
முழுக் காணொளியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.