ஏலத்தில் தவறு செய்துவிட்டோம்..! ஒப்புக்கொண்ட சிஎஸ்கே பயிற்சியாளர்!
சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு அதன் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் அளித்த பேட்டியில் ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.
சேப்பாக்கில் நேற்றிரவு சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியில் சிஎஸ்கே அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால் சிஎஸ்கே வென்றிருக்க வாய்ப்பிருக்கிறது.
இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் தோல்வியுற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர் என யாருமே சரியாக விளையாடாத காரணத்தினால் அணியில் தொடர்ச்சியாக மாற்றம் வந்துகொண்டே இருக்கிறது.
தற்போதுவரை சரியான பிளேயிங் லெவனை சிஎஸ்கே அணியினால் கண்டுபிடிக்க முடியவில்லை என தோனியே கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் பரிணமித்துள்ளது
இது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் கூறியதாவது:
சொல்லுவதற்கே கடினமாக இருக்கிறது. எங்களது செயல்பாட்டிற்கு ஏற்ப முடிவுகள் கிடைத்துள்ளன. பல போட்டிகளில் ஃபீல்டிங் போட்டியை மாற்றுவதாக இருந்துள்ளன.
எங்களது விளையாட்டு பாணி குறித்து விரிவாக பேச வேண்டியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் பரிணமித்துள்ளது, அதனால் இது எளிதானதல்ல.
எங்களது சாதனைகளை நினைத்து தற்போது பெருமையாக இருக்கிறது. ஏனெனில் நீண்ட காலமாக ஒரே மாதிரியாக நன்றாக விளையாடியுள்ளோம். வேறு வழியில் செல்ல அதிகமான நேரமெடுக்காது.
ஏலத்தில் சொதப்பல்
ஏலத்தில் மற்ற அணிகள் நன்றாகவே தேர்ந்தெடுத்ததை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். எங்களுக்கு சரியான வீரர்கள் அமையவில்லை. டாப் ஆர்டர் பேட்டர்களிடமிருந்து பொறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம்.
அந்தக் குறிப்பிட்ட சில பகுதிகளை சரிசெய்ய வேண்டும். நாங்கள் எதிர்பார்த்தமாதிரி அதுவும் நடக்கவில்லை. ஆனால், ஏலம் என்பது திடமான அறிவியல் ஆகாது. அது பாய்ந்து செல்லும் மிருகம் மாதிரியானது.
இது 25 வீடுகளை வாங்குவது மாதிரி, அந்த அனுபவத்திலுருந்து வெளிவருவது சில நேரங்களில் மனதளவிலும் உடலளவிலும் அயர்ச்சியை ஏற்படுத்தும்.
தவறுக்கு பொறுப்பேற்கிறேன்
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இப்போதும் நல்ல அணியாகவே கருதுகிறேன். நல்ல அணிக்கு மிகவும் தூரமாக இல்லை.
சில முக்கியான காயங்கள், சிலரின் ஃபார்ம் இல்லாததும் போட்டிகான திட்டமிடலிலும் சொதப்பி வருகிறோம். நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது. எதுவும் நினைத்ததுபோல் வரவில்லை.
நிச்சயமாக நாங்கள் எடுத்த முடிவுகள், அதனால் நடந்தவைகளுக்கு அதிகமாக பொறுப்பிருக்கின்றன. அது 100 சதவிகிதம் என்னில் இருந்து தொடங்குகிறது என்றார்.